அரசின் சார்பில் ‘தலைவா’ படத்துக்கு எந்த சிக்கலும் இல்லை என்று சொல்லப்பட்டாலும் படத்தின் டைட்டிலுக்கு கீழே இடம்பெற்றிருந்த time to lead வாசகங்களை நீக்கியிருக்கிறது ‘தலைவா’ படக்குழு.
தமிழகத்தில் மட்டும் ரிலீஸாகாமல் இருந்த விஜய்யின் ‘தலைவா’ படம் ஒருவழியாக பல சிக்கல்களைத் தாண்டி நாளை மறுநாள் 20-ஆம் தேதி ரிலீஸாகிறது.
இதற்கிடையே ஒருசில நிபந்தனைகளுடன் தான் இந்தப்படம் ரிலீஸாகிறது என்று தெரிகிறது.
ஆமாம், குறிப்பாக இந்தப்படத்தை முதலில் எம்.ஜி அடிப்படையில் அதாவது மினிமம் கியாரண்டி அடிப்படையில் திரையிடுவதாக தியேட்டர் உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் தற்போது அந்த வியாபார அடிப்படையில் படத்தை திரையிட முடியாது என்று தியேட்டர் உரிமையாளர்கள் மறுத்து விட்டதால் சதவீத அடிப்படையில் அதாவது “ரீல் பெட்டியை தாருங்கள், வருகிற வசூலில் உங்களுக்கு இவ்வளவு பணத்தை தருவோம்” என்ற வியாபார அடிப்படையில் தான் திரையிடுகிறார்கள்.
படம் 10 நாட்கள் கழித்து தமிழகத்தில் ரிலீஸாவதால் முதல் மூன்று நாட்களில் வரக்கூடிய வசூல் தற்போது வராது என்று தியேட்டர் உரிமையாளர்கள் பயப்படுவது தான் அதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல ‘தலைவா’ பட விளம்பரங்களில் டைட்டிலுக்கு கீழே இருந்த சப் டைட்டிலான time to lead ‘டைம் டூ லீட்’ (தலைமையேற்கும் நேரம் வந்து விட்டது) என்கிற வாசகங்களையும் நீக்கியுள்ளனர். இன்றைய தினசரி பேப்பர்களின் வந்த ‘தலைவா’ பட விளம்பரங்களிலும் இந்த வாசகங்கள் இடம்பெறவில்லை. அதேபோல விளம்பர போஸ்டர்களிலும் இந்த வாசகங்கள் நீக்கப்பட்டுள்ளன.
ஆனால் யாருடைய வற்புறுத்தலின் பேரில், இந்த வாசகங்களை நீக்கப்பட்டுள்ளது என்பதை மட்டும் ‘தலைவா’ தரப்பு இதுவரை வெளியில் சொல்லவில்லை. இப்படி இரண்டு நிபந்தனைகளுடன் தான் சுமார் 10 நாட்கள் போராட்டத்துக்கு பின் ‘தலைவா’ படம் தமிழகத்தில் ரிலீஸாகிறது.
இன்றுமுதல் சென்னை உள்ளிட்ட தியேட்டர்களில் ‘தலைவா’ படத்துக்கான முன்பதிவு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் இந்தப்படம் ரிலீஸாகும் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியுள்ளன.அதுபோக கட்– அவுட்டுகள், விஜய் மன்ற கொடிகள், தோரணங்கள் ஆகியவையும் விஜய் ரசிகர்களால் தியேட்டர்களில் கட்டப்பட்டு வருகிறது. இதனால் ‘தலைவா’ படம் ரிலீஸாகும் தியேட்டர்கல் விழாக்கோலம் பூண்டுள்ளன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !