Headlines News :
Home » » ராஜா ராணி.

ராஜா ராணி.

Written By TamilDiscovery on Sunday, September 29, 2013 | 8:18 AM

காதலித்து ஏதோ ஒரு வகையில் காதலர்கள் சேராமல் போய்விட்டால் அதன்பிறகு வாழ்க்கையே இல்லை என நினைக்க கூடாது. அதற்கு பிறகு அமையும் வாழ்க்கையை, வாழ்நாள் முழுக்க சந்தோஷமாக கொண்டு செல்ல வேண்டும்.

கதை வித்தியாசமான கோணத்தில் நகர்த்தப்பப் பட்டிருப்பதானது ரசிகர்களைக் கவருமென்பதில் சந்தேகமில்லை. காதல் ‌தோல்விக்கு பின்னரும் வாழ்க்கை உண்டு, காதல் உண்டு என்ற கருத்தை புதிய கோணத்தில் சொல்லியிருக்கும் படம் தான் ராஜா ராணி. இந்த கதையை புதுமுகம் அட்லீ, அவ்ளோ அழகாக சொல்லியிருக்கிறார்.

கதைப்படி ஆரம்பத்திலேயே ஜான் எனும் ஆர்யாவுக்கும், ரெஜினா எனும் நயன்தாராவுக்கும், பெற்றோர் விருப்பத்திற்காக திருமணம் நடக்கிறது. திருமணம் நடந்தாலும் அவர்கள் கணவன் - மனைவியாக வாழ்வது கிடையாது. திருமணத்தின் போது ஆர்யாவின் (ஜான்) பெயருக்கு பதில் முன்னால் காதலர் ஜெய் (சூர்யா) பெயரை கூறுவது ஒரு நெருடலைக் கொண்டுவருகின்றது.

எலியும்-பூனையும் போல் எப்போதும் முறைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் வெறுப்பாகவே வாழ்கின்றனர். வெறுப்பிலும் ரசிகர்களை சலிக்க விடாமல் கதை நகர்கின்றது. ஒருநாள் இரவு அதிக மனவேதனையால் நயன்தாராவுக்கு திடீரென வலிப்பு வர குடிபோதையில் இருக்கும் ஆர்யா, எப்படியோ சமாளித்துக்கொண்டு அவரை வைத்தியசாலையில் சேர்க்கிறார். அங்கு அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சையை பார்த்து கண்ணீர் விடும் ஆர்யா அவர் மீது பாசம் கொள்கிறார். ஏனெனில் அவரது காதலியின் கடைசி நிமிடங்களை  கண் முன்னே கொண்டுவரும் சம்பவமாக அது அமைந்து விடுகின்றது.

எதனால் இப்படி வலிப்பு ஏற்பட்டது என்று நயனிடம், ஆர்யா விசாரிக்கையில் பிளாஷ்பேக் விரிகிறது. நயன்தாரா ஏற்கனவே சூர்யா எனும் ஜெய்யை காதலித்து, பதிவு திருமணம் செய்யும் வேளையில் ஜெய் திடீரென அமெரிக்காவுக்கு சென்று அங்கு தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக வந்த தகவலால் அந்த அதிர்ச்சியில் இதுபோன்று ஏற்பட்டுவிட்டதாக சொல்ல, நயன் மீது ஆர்யாவுக்கு இன்னும் அன்பு கூடுகிறது.

எனினும் தன் மீது ஆர்யா காட்டும் அன்பை ஏற்றுக்கொள்ள முடியாத நயன் அவர் மீது வெறுப்பை அள்ளிக் கொட்டுகின்றார். இதனால் ஆர்யா மிகவும் நொந்து போகின்றார். பொது இடத்தில் கணவனான ஆர்யாவை அவமதிப்பது சற்று ஓவராகவே திரைக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

இது ஒரு புறம் இருக்க ஆர்யா, நஸ்ரியாவை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் ஒரு கோயிலில் கல்யாணம் பண்ணி, மறுநாள் அவுட்டிங் போகும் போது எதிர்பாரா விதமாக நஸ்ரியா சாலை விபத்தில் உயிரிழக்கிறார். நஸ்ரியாவின் விபத்து அனைவரது கண்களிலும் கண்ணீரை துளிர்க்க வைக்கின்றது. இதனால் ஆர்யாவும் இடிந்து போய் 4 வருடமாக நஸ்ரியா நினைப்பாகவே இருக்கிறார்.

ஆர்யாவின் காதல் கதையை கேட்டு நயன்தாராவுக்கும் அவர் மீது பாசம் ஏற்படுகிறது. ஆனால் இந்த பாசத்தை இருவருமே வெளிக்காட்ட நினைக்கும்போது ஒவ்வ‌ொரு முறையும் ஏதாவது ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இவர்களுக்குள் ‌ஏற்படுகிறது.

இதற்கிடையே ஜெய், உயிரோடு இருக்க  கடைசியில் நயன்தாரா ஜெய்யுடன் இணைந்தாரா? அல்லது ஆர்யாவுடனேயே தனது வாழ்க்கையை தொடர்ந்தாரா? என்பது மீதிக்கதை!

ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா என நான்கு பேர் இருந்தாலும் நால்வருக்கும் சமமான ரோல் கொடுத்துள்ளார் இயக்குநர். ஆர்யா வழக்கம் போல் தனக்கான பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.

ஆர்யாவைக்காட்டிலும் ஒரு சில நிமிடங்களே வந்தாலும் அசத்தி விட்டார் ஜெய். பயந்தசுபாவம் உடைய ஜெய்யை, நயன்தாரா போனில் கலாய்க்கும் போது அவர் அழுவது தொடங்கி, கடைசி காட்சியில் ஆர்யாவை, ஏய். போடா என்று சொல்லும் காட்சிகள் வரை தனக்கான ரோலை பக்காவாக பண்ணியிருக்கிறார்.

ஜெய்யுடனான ரொமான்ஸ் காட்சியிலும் சரி, கணவர் எனும் பெயரில் இருக்கும் ஆர்யாவுடன் எப்போதும் முறைத்து கொண்டு திரியும் காட்சிகளிலும் சரி முகத்தில் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் சூப்பர். அதிலும் வலிப்பு ஏற்படும் போது, கண்ணின் கருவிழியே தெரியாத அளவுக்கு கண்ணில் அவர் காட்டும் நடிப்பு அபாரம். அப்போது நயனைப் பார்க்கையில் நமக்கே சற்று பயம் தோன்றுகின்றது.

ஏய் ரிங்கா ரிங்கா... எனும் பாட்டுக்கு நைட்டியை மடித்து கட்டி, வாயில் டூத்பிரஸ் உடன் ஆடியபடி அறிமுகமாகும் நஸ்ரியா, தொடர்ந்து பிரதர் பிரதர்... என ஆர்யாவை கடுப்பேற்றும் காட்சிகளிலும் சரி, பின்பு அதே ஆர்யாவுடனான ரொமான்ஸ் காட்சிகளிலும் சரி கொள்ளை அழகு. ஒவ்வொரு காட்சிக்கும் முகத்தில் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் சிறப்பு!
திரையிலிருந்து நஸ்ரியா மறந்த பின்னரும் அவர் நினைவுகளை நம் மனதுக்குள் ஓட விடுகின்றது அவரது நடிப்பு.


வழக்கம்போல் சந்தானத்தின் டைமிங் காமெடிகள் தியேட்டரை அதிரவைக்கின்றன. சந்தானத்தின் காமெடிகள் ஒரு நியமான சூழலுக்குள் நம்மை இழுத்துச் செல்கின்றது. சந்தானம் தவிர ஜெய்யின் நண்பராக வரும் சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

மணிரத்னத்தின் ‘மெளனராகம்’ ஸ்டைல் கதை என்றாலும், அதை இன்றைய காலத்துக்கு ஏற்ற மாதிரி ஸ்டைலாக கொடுத்து இருப்பதில் புதியவர் அட்லீ மிளிர்கிறார்.

‘‘உலகத்துல யாருமே மேட் பார் ஈச் அதரா பொறக்கிறது இல்ல, வாழ்ந்து காட்டுறதுல தான் இருக்கு", "நம்ம கூட இருக்குறவங்க நம்மள விட்டு போய்ட்டாங்கன்னா, நாமளும் போகணும்னு அவசியம் கிடையாது. என்னைக்காவது ஒரு நாள் நாம் ஆசப்பட்ட மாதிரி வாழக்கை மாறும்’’ போன்ற வசனங்களுக்கு தியேட்டரே எழுந்து நின்று கை தட்ட வைக்கின்றது.

வைத்தியசாலையில், நயன்தாராவை சேர்த்திருக்கும்போது, டாக்டர் வந்து ஆர்யாவிடம், மனைவி பெயர் என்ன என கேட்கும்‌போதும், மனிவியின் வயது என்ன என்று கேட்க்கும் போதும் தெரியாது என்று கூறுவது சற்று ஓவராகத் தெரிந்தாலும், சந்தர்ப்பம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் கதை நகர்த்தப்பட்டிருக்கின்றது.

இதேபோல் ஜெய், நயன்தாராவை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டு பதிவு அலுவலகத்திற்கு வராமல், ‌சொல்லாமல் கொள்ளாமல் அமெரிக்கா பறப்பது ஏன், அதற்கான காரணத்தை ஒரு சில காட்சிகளிலாவது டைரக்டர் காட்டியிருக்கலாம். நாம் தான் பயந்த சுபாவத்தின் காரணமாக ஜெய் அமெரிக்கா பறந்துவிட்டார் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் போல.

அட்லீஸ்ட்  நயன்தாராவுக்கு ஒரு போனாவது பண்ணியிருக்கலாம் உள்ளிட்ட ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், ஜீ.வி.பிரகாஷ் குமாரின் அசத்தல் இசை, ஜார்ஜ் சி.வில்லியம்சின் ரம்மியமான ஒளிப்பதிவு, அந்தோணி எல்.ரூபனின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் ராஜா ராணி அழகிய ஓவியமாய் மிளிர்ந்து இருக்கிறது. குடும்பத்துடன் திரையில் ரசிக்ககூடியதுமாக, இளைஞ்கர்களை புதிய கோணத்தில் சிந்திக்க தோன்றும் விதமாகவும் கதை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template