Headlines News :
Home » » அவர்கள் யார் என்னை அழைக்க? கருணாநிதி சாட்டையடி பதில்!

அவர்கள் யார் என்னை அழைக்க? கருணாநிதி சாட்டையடி பதில்!

Written By TamilDiscovery on Thursday, September 19, 2013 | 8:11 PM

இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கு தன்னை அழைக்காதது குறித்த கேள்விக்கு, அவர்கள் யார் என்னை அழைப்பதற்கு என சாட்டையடி பதில் தந்துள்ளார் திமுக தலைவரும் திரையுலகின் மூத்த எழுத்தாளருமான கருணாநிதி.

தமிழ் சினிமாவில் தன் வசனங்களால் பெரும் மாறுதல்களை உண்டாக்கியவர் என்ற பெருமை மு-கருணாநிதிக்கு உண்டு. ஒரு படத்தின் ஹீரோவுக்கு நிகராகப் பேசப்பட்டவை அவரது நெத்தியடி வசனங்கள்.

கதை வசன ரெக்கார்டுகள்:
தமிழ் சினிமாவில் கதை வசன ரெக்கார்டுகள் ஏராளமாய் விற்க ஆரம்பித்ததே இவர் காலத்தில்தான் என்ற உண்மையை பலர் வசதியாக மறந்துவிட்டனர்.

20 வயதில் ராஜகுமாரி:
தன் 20 வயதில் ராஜகுமாரி படத்துக்காக முதல் முதலில் வசனம் எழுதினார் கருணாநிதி. அதில் நாயகன் புரட்சி நடிகர் எம்ஜிஆர். தொடர்ந்து எம்ஜிஆர் படங்களுக்கு அவர்தான் ஆஸ்தான வசனகர்த்தா எனும் அளவுக்கு வசனங்கள் எழுதினார்.

பராசக்தி:
சிவாஜி அறிமுகமான பராசக்தி கருணாநிதிக்கு எட்டாவது படம். அதற்கும் முன்பே ஏராளமான நாடகங்களை செழுமைப்படுத்தியவை கருணாநிதியின் வசனங்களே. சில நாடகங்களில் நடித்துமிருக்கிறார்.

அத்தனை ட்ரெண்டுக்கும்:
கருணாநிதி வசனமெழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட 70 நெடிய ஆண்டுகள் ஓடிவிட்டன. எழுபது தசாப்தங்கள். ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒரு புதிய ட்ரெண்டைச் சந்தித்து வருகிறது தமிழ் சினிமா. ஆனால் அத்தனை மாற்றங்களையும் கவனித்து ஈடுகொடுத்து இன்று வரை எழுதி வருகிறார் கருணாநிதி.

சரித்திரப் படங்கள் தொடங்கி சமூகப் படங்கள் வரை:
சரித்திரப் படங்களான ராஜகுமாரி, அபிமன்யு, மந்திரி குமாரி போன்றவற்றில் பிரவாகமான சரித்திரத் தமிழில் புகுந்து விளையாடிய அவர் பேனா, பராசக்தியில் சாட்டையாய் மாறி சமூக அவலங்களைத் தோலுரித்தது.

அடுத்து வந்த மனோகரா, பூம்புகார் போன்ற சரித்திரப் படங்களில் மீண்டும் தன் பழைய ஸ்டைலுக்கு மாறியது. இருவர் உள்ளம், பாசப் பறவைகள், பாடாத தேனீக்கள் போன்ற குடும்பப் படங்களில் அழகுத் தமிழில் வசனங்கள் படைத்தது.

அரசியல் எள்ளல்:
இதே கருணாநிதிதான் சமகால திரைப்படங்களான நீதிக்குத் தண்டனை, பாலைவன ரோஜாக்கள் என அதிரடியாக அரசியல் எள்ளல் படங்களிலும் வசனங்கள் எழுதினார்.

பொன்னர் சங்கர்:
வயது தொன்னூறைத் தொட்டுக் கொண்டிருந்த நேரத்திலும் அவரது பேனாவுக்கு சினிமா மீதான மோகம் தீரவே இல்லை. கண்ணம்மா, பாசக் கிளிகள், உளியின் ஓசை, வேங்கையின் மைந்தன், பெண் சிங்கம், இளைஞன், பொன்னர் சங்கர் போன்றவை அவர் சமீபத்தில் கதை வசனமெழுதிய படங்கள்.

இந்தப் படங்களில் பொன்னர் சங்கர் சிறப்பாகவே வந்திருந்தது. மற்ற படங்கள் இளையோர் மத்தியில் விமர்சிக்கப்பட்டன. அதுகூட அவர் வசனத்துக்காக அல்ல, அரசியல் நிலைப்பாடு, ஈழப்பிரச்சினை போன்றவற்றுக்காக. மற்றபடி அவர் வசனத்தை குறை சொல்லும் தகுதியுள்ள கொம்பன் சினிமாவில் யாருமில்லை என்பதே உண்மை!

கருணாநிதி செய்த உதவிகள்:
இந்த தமிழ் சினிமாவுக்கு, எம்ஜிஆருக்குப் பிறகு அதிக நன்மைகள் செய்தவர் என்றால் அது கருணாநிதி ஒருவர்தான். பட்டியலிட முடியாத அளவுக்கு சலுகைகள். அடிமட்ட சினிமாக் கலைஞர் கூட நினைத்தால் முதல்வராக இருந்த கருணாநிதியைப் பார்த்துவிட முடியும். அந்த அளவு சினிமாக்காரர்களுக்கு இடம் கொடுத்தார் கருணாநிதி.

அட, அவர்களுக்காக தனி வாரியமே அமைத்தார். பொதுமக்களுக்கே வெறுப்பு வரும் அளவுக்கு அவர் சினிமாக்காரர்களைக் கொண்டாடினார் என்பதையும் மறுப்பதற்கில்லை.

பெயரைச் சொல்லவும் அச்சம்:
அப்படிப்பட்ட கருணாநிதியை இன்று சினிமாக்காரர் ஒருவரும் திரும்பிப் பார்க்கவும் தயங்குகின்றனர். அன்று பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா எடுத்த பார்ட்டிகள், இப்போது கருணாநிதி என்ற பெயரைச் சொல்வதையே தவிர்க்கின்றனர். காற்றில் வசனக் கத்தி வீசிய வெத்து ஹீரோக்கள் பெட்டிப் பாம்பாய் ஒடுங்கிக் கிடக்கின்றனர்.

அழைப்பில்லை:
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 70 நெடிய ஆண்டுகள் எழுத்தாளராக, தயாரிப்பாளராக இருக்கும் கருணாநிதியின் குடும்பத்தினர் பலரும் இன்று திரையுலகில் முன்னணியில் உள்ளனர். இத்தனை சிறப்பு இருந்தாலும், இன்று இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவுக்கு கருணாநிதிக்கு ஒரு அழைப்பிதழ் வைக்க அஞ்சும் நிலை.

அவர்கள் யார் என்னை அழைக்க:
இதுபற்றி கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "அவர்கள் யார் என்னை அழைப்பதற்கு?" என்று பொட்டிலடித்த மாதிரி பதில் கூறி, அந்தப் பிரச்சினையைக் கடந்து போய்விட்டார் கருணாநிதி.

நூறாண்டு காணும் இந்திய சினிமாவின் முக்கிய அங்கமான தமிழ் சினிமாவுக்கு பெரும் பங்களிப்பு செய்த கருணாநிதியை அழைக்காததும் சிறப்பிக்காததும் நிச்சயம் கருணாநிதிக்கு இழுக்கல்ல. தமிழ் சினிமாவுக்குதான் பெரும் தலைகுனிவு!

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template