விஜய் நடித்துள்ள தலைவா படம் 9ம் திகதி திரைக்கு வரும் நிலையில்,
அப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதால்
முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் தலைவா படத்தை திரையிட அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை
ஏற்படுமா? என்பது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனையில்
ஈடுபட்டிருப்பதாகவும், மேலும் பொலிஸார் தங்கள் தரப்பில் இத்தனை
திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று கூறியிருந்ததாகவும்
தகவல்கள் வெளியானது.
இதையடுத்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில்
புதன்கிழமை மாலை அவசர கூட்டம் நடைபெற்றது. அதில், ‘’நடிகர் விஜய்யும்,
அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும் இப்பிரச்சினையில் தலையிட்டு தமிழக
அரசிடம் பேசினால் நல்ல தீர்வு கிடைக்கும். விஜய்யும், சந்திரசேகரும் பேசி
நல்ல முடிவை தரும் பட்சத்தில், அரசு தரப்பின் ஒத்துழைப்பை பெற்றுத் தரும்
பட்சத்தில் படத்தை வெளியிட எங்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லை’’ என்று
அபிராமி ராமநாதன் தெரிவித்திருந்தார்.
திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, ஜெயலலிதாவை சந்தித்து
விளக்கம் அளிக்கவும் அவரது ஆதரவைக் கேட்கவும் நடிகர் விஜய், அவரது தந்தை
சந்திரசேகருடன் சென்றதாகத் தெரிகிறது.
கொடநாட்டில் தங்கியுள்ள ஜெயலலிதாவை சந்திக்க நடிகர் விஜய், அவரது தந்தை
எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி
மறுக்கப்பட்டதையடுத்து, இருவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கொடநாட்டுக்கு முன்னர் உள்ள கெரடாமட்டம் என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடி
பகுதியிலேயே இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாகக்
கூறப்படுகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !