சென்னை பல்லாவரத்தின் கவுல்பஜார் யசோதா தெருவை சேர்ந்தவர் பாபு(வயது 36), கூலித்தொழிலாளியான பாபுவின் மனைவி முத்துலட்சுமி(வயது 26). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
பாபு குடிப்பழக்கம் உடையவர், வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபடுவார். தகராறு முற்றும் நிலையில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வேன் என முத்துலட்சுமி மிரட்டுவார். இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.
இந்நிலையில் குழந்தைகளுக்கு பள்ளிக்கூட பீஸ் கட்ட முடியாமல் முத்துலட்சுமி தவித்தார். இதுபற்றி கணவரிடம் கேட்டபோது தகராறு வலுத்துள்ளது. இந்நிலையில் நேற்று வேலைக்கு செல்லாமல் பாபு குடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார். இதனால் மனம் உடைந்த முத்துலட்சுமி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி, தீ வைப்பதாக மிரட்டியுள்ளார். வழக்கம் போல மிரட்டுவார் என பாபுவும் இருந்து விட்டார். சிறிது நேரத்தில் உடல் முழுவதும் தீப்பிடித்த நிலையில் முத்துலட்சுமி அலறி துடித்தார்.
இதை சற்றும் எதிர்பாராத பாபு அதிர்ச்சியுடன் ஓடி சென்று காப்பாற்ற முயன்றார். இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலையில் முத்துலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சங்கர் நகர் பொலிசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !