டீக்கடையில் டீ குடித்தவர் மீது சந்தேக வழக்கு போட்ட பொலிஸாருக்கு மும்பை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மும்பையை சேர்ந்தவர் விஜய் பாட்டீல். இவர் கடந்த பெப்ரவரி, 22ம் திகதி காலை 11 மணியளவில் கோல்காபூரில் சிவாஜி பல்கலைக் கழகம் அருகேயுள்ள டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ரோந்து பொலிசார், இவரை பிடித்துச் சென்றனர்.
‘சந்தேகப்படும் வகையில் டீ குடித்து கொண்டிருந்தார். அதற்கு சரியான விளக்கம் அளிக்கவில்லை’ என கூறி அவர் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (சிஆர்பிசி) 151வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் வேதனை அடைந்த விஜய் பாட்டீல், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘பொலிசார் என்னை சட்ட விரோதமாக கைது செய்துள்ளனர். என்னை காலை 11 மணிக்கு கைது செய்த பொலிசார், குறிப்பேட்டில் மாலை 3.30க்கு கைது செய்ததாக பொய் தகவலை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் தர்மதிகாரி, ஜி.எஸ் பாட்டீல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பு வக்கீல் வாதிடுகையில், ‘‘விஜய் பாட்டீல் குற்றங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டவர் என ராஜாராம்புரி பொலிஸ் நிலைய எஸ்.ஐ. ஜாதவ் கூறியுள்ளார். இன்னொரு குற்றச் செயலில் ஈடுபடுவதற்கு முன் அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்’’ என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் கூறியதாவது,
பொலிசாரின் நடவடிக்கை அதிர்ச்சியாக உள்ளது. டீ குடிப்பதற்கு கூட விளக்கம் அளிக்க வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை நாங்கள் இதுவரை அறியவில்லை.
ஒருவர் பல விதமாக டீ குடிக்கலாம். எல்லாரும் எப்போதும் நேர்த்தியாக டீ குடிக்க முடியாது. சிலர் உறிஞ்சி சத்தமாக டீ குடிக்கிறார்கள். ஆனால், சந்தேகப்படும் வகையில் ஒருவர் எப்படி டீ குடிக்க முடியும் என்பது புரியவில்லை.
மனுதாரர் மீது ஏற்கனவே 113 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர். இதில் ஒரு வழக்கு மட்டுமே ஆயுத சட்டப்பிரிவு வழக்கு. மற்றவை சூதாட்ட வழக்கு. பல வழக்குகளில் மனுதாரர் விடுதலையாகி இருக்கிறார். மற்றவை நிலுவையில் உள்ளன.
ஒரு வழக்கில் கூட குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. பழைய குற்ற வழக்கு பின்னணிக்கும், இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
எனவே, விஜய் பாட்டீலுக்கு எதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !