ஃப்ரீஸருக்கு ஆசைப்பட்டு 11 வயது மகளை விற்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அர்ஜென்டினாவின் பியுனோஸ் எய்ர்ஸ் நகரில் வாழ்ந்து வரும் பாப்லா செசரினா மான்சன் அல்டானா(வயது 30) என்ற பெண்ணுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் நோய்வாய்ப்பட்டு இருப்பதால், தனது 11 வயது மகளை பராகுவே நாட்டில் உள்ள உறவினர் வீட்டில் வைத்திருந்தார்.
இந்நிலையில் குடும்ப கஷ்டம் மிக அதிகரிக்கவே, தனது மகளை மீண்டும் அழைத்து வந்துள்ளார்.
இதற்கிடையே, பியுனோவ் எய்ர்ஸ் அருகேயுள்ள பெர்னல் தொழிற்பேட்டையில் குழந்தை தொழிலாளர்களை அடைத்து வைத்து வேலை வாங்குவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக விரைந்து சென்ற பொலிசார் சிறுவர், சிறுமிகளை மீட்டனர்.
அப்போது 11 வயது சிறுமி ஒருவர் பொலிசாரிடம், என் அப்பாவால் வேலை செய்ய முடியாது. எனவே எனது தாயார் என்னை வேலைக்கு அனுப்பினார். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் வசித்தவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்றனர். அப்போது அவர்களின் வீட்டில் இருந்த ஃப்ரீஸர் (இறைச்சியை உறைய வைத்து பாதுகாக்கும் பெட்டி) உள்பட சில பொருட்களை எடுத்துக் கொள்கிறீர்களா? என்று என் அம்மாவிடம் கேட்டனர்.
எங்களிடம் அவ்வளவு பணம் இல்லையே, என்று என் அம்மா கூறியபோது, பணம் இல்லை என்றால் பரவாயில்லை. உங்கள் மகளை எங்களுக்கு தந்துவிட்டு, எங்கள் பழைய சாமான்களை எல்லாம் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஃப்ரீஸருக்கு ஆசைப்பட்ட என் அம்மா என்னை அவர்களுக்கு விற்று விட்டார். என்னை வாங்கி வந்தவர்கள் இந்த அலுமினியம் கம்பெனி முதலாளியிடம் நல்ல விலைக்கு விற்று விட்டனர். இந்த கம்பெனியை நடத்துபவர்கள் என்னைப்போன்ற சிறுமிகள் பல மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று அடித்து, உதைத்து சித்ரவதை படுத்தினர்.
மேலும், இங்குள்ள சிலர் எங்களை மிரட்டி பாலியல் பலாத்காரமும் செய்து வருகின்றனர் என்று அந்த சிறுமி கண்ணீருடன் வாக்குமூலம் அளித்தார்.
இதனையடுத்து நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்த பொலிசார், சிறுமியின் தாயார், விலைக்கு வாங்கிய தம்பதியர் ஆகியோரை தேடி வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !