ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டு சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த், அங்கித் சவான் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வாழ்நாள் தடை விதித்துள்ளது.
பரபரப்பான ஐபிஎல் போட்டிகளுக்கு நடுவே சூதாட்ட விவகாரம் சூடு பிடித்தது. இதில் ராஜஸ்தான் அணி வீரர்கள், புக்கிகள் என பலரும் சிக்கினர்.
இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த், அஜித் சான்டிலா, அங்கீத் சவான், அமித் சிங் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 4 பேர் மீதான வழக்கு ஒருபுறம் நடந்து வந்தாலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரவி சவானி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
இந்த ஆணைய விசாரணையின் போது 4 வீரர்களுமே ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் பிக்சிங்கில் ஈடுபட்ட வீரர்கள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கவும் விசாரணை ஆணையம் பரிந்துரைத்தது. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு இன்று கூடியது. டெல்லியில் என். சீனிவாசன், அருண் ஜேட்லி, நிரஞ்சன் ஷா ஆகியோர் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை அறிக்கையின் பரிந்துரைகள் அடிப்படையில் ஒவ்வொரு வீரரிடம் தனிப்பட்ட முறையில் விளக்கம் கேட்டது.
அதன் பின்னர் அந்த குழு வீரர்களுக்கான தண்டனை விவரத்தை வெளியிட்டது. இந்த ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய மற்றொரு வீரரான அமீத் சிங்குக்கு 5 ஆண்டுகால தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வீரரான சித்தார் திரிவேதி ஓராண்டு காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹர்மீத் சிங் என்ற வீரருக்கு மன்னிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சாண்டிலாவுக்கு என்ன மாதிரியான தண்டனை விதிப்பது என்பது பற்றி பின்னர் முடிவு செய்யப்பட இருக்கிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !