குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கேட்ட அப்பாவி மக்களுக்கு இரக்கமற்ற துப்பாக்கி குண்டுகள் மூலம் பதிலளித்த ராஜபக்ஷ அரசு, உவ்வுலகில் இதுவரையில்லாத கீழ்த்தரமான அரசாக தனது செயற்பாட்டில் ஒப்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க வெலிவேரிய சம்பவம் குறித்து இன்று (03) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
ரத்துபஸ்வல மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் பதிலளித்த விதத்தை ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இதனை அனைத்து உலகமும் கண்டிக்கும்.
இராணுவ துப்பாக்கிச்சூட்டில் பாடசாலை மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். தண்ணீர் கேட்ட மக்களுக்கு ராஜபக்ஷ அரசாங்கம் இராணுவத்தை அனுப்பி துப்பாக்கி குண்டுகள் மூலம் பதில் அளித்துள்ளது.
தாக்குதலில் ஒருவர் பலியாகி 34 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் உள்ளனர். அவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடம். இதன்போது ஊடகவியலாளர் தாக்கப்பட்டதை எமது கட்சி கண்டிக்கிறது. தண்ணீர் கேட்ட மக்கள் தீவிரவாதிகள் இல்லை என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும். பொலிஸார் மூலம் தீர்வு வழங்க வேண்டிய விடயத்திற்கு இராணுவத்தை வரவழைத்து தமது நாட்டு மக்கள் மீ்தே துப்பாக்கிச்சூடு நடத்தியதன் மூலம் நாடு இராணுவமயமாகியுள்ளமை தெளிவாகிறது.
இதன்மூலம் இராணுவம் குறித்து மக்களுக்கு இருந்த நல்லெண்ணத்தை இந்த அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் சேதப்படுத்தியுள்ளனர். இராணுவத்தினரை மக்கள் துரோகிகளாக அரசாங்கம் மாற்றியுள்ளது. மக்களை கொலை செய்பவர்களாக இராணுவத்தினரை அரசாங்கம் சித்தரிக்கிறது. எனவே இராணுவத்தினரை அபகீர்த்திக்கு உட்படுத்துவது இந்த ராஜாக்ஷ அரசாங்கமே தவிர ´பறக்கும் மீன்கள்´ திரைப்படத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய கலைஞர்கள் அல்ல.
ரத்துபஸ்வல சம்பவம் குறித்து விசாரிக்க இராணுவ குழு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. புதிய இராணுவ தளபதியா இராணுவத்திற்கு கட்டளை பிறப்பித்தார்? அல்லது அரசாங்கத்தின் அதிஉயர் பீடமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே விசாரணை குழு மூலம் நியாயமான விசாரணை நடாத்தப்பட்டு இராணுவத்தினர் மீது படிந்துள்ள கறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என ஐக்கிய தேசியக் கட்சி அவதானித்துக் கொண்டிருக்கும்.
இவ்வாறு திஸ்ஸ அத்தநாயக்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !