சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத் ஆட்சிக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால் பதவி விலக மறுக்கும் அவர் போராட்டக்காரர்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறார்.
அதில், சுமார் 1 லட்சத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். 7 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கசின் புறநகரமான கவுட்டா மற்றும் மொடமியே பகுதிகளில் சிரியா ராணுவம் கடந்த 21-ம் தேதி ரசாயன குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதில் இருந்து வெளியான நச்சு புகையில் சிக்கி குழந்தைகள், பெண்கள், முதியர்கள் உட்பட 1300-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இக்கொடூர சம்பவத்துக்கு ஐ.நா. கடும் கண்டனமும், வருத்தமும் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து காலதாமதமின்றி உடனடியாக சிரியா அரசிடம் விசாரணை நடத்த ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். மேலும் அதிகாரி ஏஞ்சலா கனே என்பவர் தலைமையில் ஒரு குழுவை ஐ.நா. சபை டமாஸ்கஸ் நகருக்கு அனுப்பியுள்ளது. இந்த குழுவினர் சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் வீசப்பட்டதாக கூறப்படும் இடங்களில் நேற்று ஆய்வு செய்தனர்.
ஆரம்பத்தில் ஐ.நா. அதிகாரிகளின் சோதனைக்கு ஆட்சேபனை தெரிவித்து வந்த சிரியா அரசு, தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. ஆய்வாளர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அருகே இன்று காலை 2 மோட்டார் குண்டுகள் வெடித்தன. இது தீவிரவாதிகளின் சதிவேலை என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், ஐ.நா. அதிகாரிகள் ரசாயன ஆயுதங்கள் உபயோகிக்கப்பட்ட இடத்தை சோதனையிடக் கூடாது என்று அதிபர் பஷர் அல்-ஆசாத்தின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
இந்த தாக்குதலை பொருட்படுத்தாத ஐ.நா. ஆய்வாளர்கள் ரசாயன ஆயுதங்கள் உபயோகிக்கப்பட்டதாக கூறப்படும் இடத்திற்கு கார்களில் புறப்பட்டு சென்றனர். போகும் வழியில் அவர்கள் சென்ற கார் மீது சிலர் வெடிகுண்டு வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் ஒரு கார் சேதமடைந்தது. ஆய்வாளர்களில் யாரும் காயமடைந்தனரா? என்பது தொடர்பான தகவல்களை வெளியிட ஐ.நா. அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இந்த தடைகளையும் மீறி மொடமியே பகுதிக்கு சென்ற ஐ.நா. ஆய்வாளர்கள் தாக்குதல் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆஸ்பத்திரிக்கு சென்ற ஆய்வாளர்கள், அங்கு பணியாற்றும் டாக்டர்களிடமும், சிகிச்சை பெறும் நோயாளிகளிடமும் விசாரணை நடத்தினர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !