அகமதாபாத்தில் ஒருவர் தனது 2 மகள்களை ஆட்டோவில் வைத்து எரித்துக் கொலை செய்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் உள்ள நரோடாவைச் சேர்ந்தவர் கோவிந்த் ராத்தோட்(40).
அவரது மனைவி இந்து. அவர்களுக்கு ஹிரால்(10), ரேணுகா(8), நேஹா(7) மற்றும் பூனம்(6) ஆகிய 4 மகள்களும், ஜிக்னேஷ் என்ற 1 வயது மகனும் உண்டு. கோவிந்த் அடிக்கடி கோபப்படும் வழக்கம் உள்ளவர். முதலில் சி.ஐ.டி அலுவலகத்தில் வேலை பார்த்த அவர் சக ஊழியர்களுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரது தாயும், மனைவியும் சேர்ந்து அவருக்கு ஒரு ஆட்டோ வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் அவர் தனது ஆட்டோவில் பயணம் செய்பவர்களிடமும் சண்டை போட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்று மதியம் தனது மகள்கள் பூனம் மற்றும் நேஹாவை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவர் ஒரு இடத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு தனது மகள்களோடு சேர்த்து ஆட்டோவுக்கு தீ வைத்தார். ஆட்டோவில் 2 சிறுமிகள் இருப்பதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அவர்களை காப்பாற்ற ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அவர்கள் தீயில் கருகி பலியாகினர்.
உடனே பொதுமக்கள் கோவிந்தை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் கோவிந்த் கூறுகையில், பொதுமக்களின் பிடியில் இருந்து தப்பித்து சபர்மதியில் உள்ள ஆசிரம் ஷாலாவில் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மற்றைய 2 மகள்களையும் கொல்ல நினைத்தேன், முடியவில்லை என்றார்.
பூனம் மற்றும் நேஹாவை அழைத்துச் செல்லும்போது கோவிந்த் தனது 1 வயது மகனையும் ஆட்டோவில் கூட்டிச் செல்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் குழந்தையை கொடுக்க இந்து மறுத்துள்ளார். ஆண் குழந்தையையும் கோவிந்த் கொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்து அளித்த வாக்குமூலத்தின்படி போலீசார் கோவிந்த் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !