Headlines News :
Home » » இஸ்லாமியப் பெண்கள் அணியும் பர்தாவுக்கு இலங்கையில் தடை வருமா?

இஸ்லாமியப் பெண்கள் அணியும் பர்தாவுக்கு இலங்கையில் தடை வருமா?

Written By TamilDiscovery on Tuesday, July 9, 2013 | 7:51 AM

முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்தை மூடிய 'அபாயா" உடையை உடனடியாக இலங்கையில் சட்டரீதியாக தடை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தமது கவனத்தை முழுமையாக செலுத்த வேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது

இதற்கான தடையை செய்யா விட்டால் மாமாஸ்மீ போன்ற பாதாள உலக கோஷ்டியினரின் கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் போதைவஸ்து கடத்தல்களுக்கும் அபாயா பாதுகாப்பாக அமையும். இது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாகுமென்றும் அந்த அமைப்பு அறிவித்தது.

கொழும்பிலுள்ள சம்புத்தத்துவ ஜயந்தி மண்டப கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பொதுபலசேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பாதாள உலக கோஷ்டியின் பிதா மகனான மாமாஸ்மீனை கைது செய்வதற்கு விசேட அதிரடிப்படையினர் பல தடவைகள் முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை. முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா உடையணிந்தே கொலை, கொள்ளை, போதைவஸ்து கடத்தல்களில் அவர் ஈடுபட்டுள்ளார். இதுவே அவர் பிடிபடாமைக்கு காரணமாகும். எமது படையினரின் சாதுரியத்தால் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக எமது நன்றியை தெரிவிக்கின்றோம்.

எனவே, பொதுஇடங்களில், மக்கள் செறிவு மிகுந்த இடங்களில் முகத்தை மூடிய பர்தா ஆடை அணிவதை அரசாங்கம் உடனடியாக தடைசெய்ய வேண்டும். வெறுமனே தடை செய்வதை விடுத்து அதற்கான சட்டங்களை தயாரித்து உடனடியாக தடைசெய்ய வேண்டும். நாட்டில் அதிகமாக கள்ளக் கடத்தல்களில் ஈடுபடுவோர் யாரென்பதை அனைவரும் அறிவார்கள். நிகாப், குர்தா உடைகளையும் தடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இது தேசிய பாதுகாப்பிற்கு குந்தகமாக அமையும். குர்ஆனில் எந்த இடத்திலும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி ஆடை அணிய வேண்டுமென வலியுறுத்தவில்லை. ஒரு ஆண் பெண்ணின் முகத்தை ஒரு தடவைக்கு மேல் பார்க்கக்கூடாது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 31 மாணவர்களில் 27 முஸ்லிம் பெண்கள் சித்தியடைந்து மருத்துவ பீடம் சென்றுள்ளனர். இவ்வாறு பரீட்சை எழுதியவர்கள் முகத்தை மூடிய ஆடையுடனேயே எழுதியுள்ளனர் என அங்குள்ள சிங்கள மாணவர்கள் தெரிவிக்கின்றனர். முகத்தை மூடிக் கொண்டு ஆசிரியர்கள் அல்லது வேறெவராவது பரீட்சைகளில் தோற்றினார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.

கண்டியில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளையொன்றிலும் இவ் உடை பயன்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரபு நாடல்ல. எனவே, நாம் அரசாங்கத்தை கேட்பது இவ் ஆடையை உடனடியாக சட்ட ரீதியாக தடை செய்ய வேண்டும் என்பதேயாகும்.

ஒருவரை ஒருவர் நேரடியாகப் பார்க்க வேண்டும். அவர் யாரென்பதை கண்டறிய வேண்டும். இது மனித உரிமையாகும். ஆனால், பொது இடங்களில் முகத்தை மூடிக் கொண்டிருப்பது மனித உரிமை மீறலாகும். நெதர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின் போன்ற பல்வேறு நாடுகளில் முகத்தை மூடும் ஆடைகளுக்கு சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி அவ் ஆடையை அணிந்தால் பல இலட்சம் ரூபா நீதிமன்றத்தால் தண்டம் விதிக்கப்படும். ஏனென்றால் முகத்தை மூடுவது மனித உரிமை மீறல் என அந்நாட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் வியாக்கியானம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் உண்மை. பொது இடங்களில் அனைவரது முகத்தையும் பார்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். வீட்டுக்குள் எதனையும் செய்து கொள்ளட்டும்.

எனவே, இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் குற்றச் செயல்களுக்கும், போதைப் பொருள் கடத்தலுக்கும் உறுதுணையாகவுள்ள அபாயா ஆடையை இலங்கையில் உடனடியாக தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template