திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 4 மணிநேரமாக கேட்பாரற்று கிடந்த சூட்கேஸால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது.
திருப்பதி-திருமலை ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் அனைத்து உடைமைகளும் மலையடிவாரமான அலிபிரியில் தீவிர சோதனை செய்யப்படுகிறது.
அதன்பிறகே பக்தர்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஏழுமலையான் கோயிலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக மத்திய புலனாய்வு துறையினர் அடிக்கடி எச்சரிக்கை செய்து வருகின்றனர். இதன்காரணமாக ஏழுமலையான் கோயிலில் துணை ராணுவம், ஆக்டோபஸ் படை உள்பட 7 பிரிவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜி.என்.சி. சோதனை சாவடி அருகே உள்ள கருடாத்ரி நகர் பக்தர்கள் ஓய்வறை அருகே ஒரு சூட்கேஸ் அனாதையாக கிடந்ததை பக்தர்கள் இன்று காலை 8 மணியளவில் கண்டுபிடித்தனர். அதிகாலை 4 மணி முதல் இதே இடத்தில் கேட்பாரற்று கிடந்துள்ளது. இதனால் இந்த சூட்கேசில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கலாம் என தகவல் பரவியது.
இதனால் பக்தர்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது. இதுகுறித்து பக்தர்கள், தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்தனர். மற்றும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அந்த சூட்கேசை கைப்பற்றிய நிபுணர்கள் பாதுகாப்பான முறையில் சோதனை செய்தனர். அப்போது, அது காலியாக இருந்ததை கண்டு நிம்மதியடைந்தனர்.
சூட்கேசை இங்கு வைத்துவிட்டு சென்றவர்கள் குறித்து விசாரணை நடந்தது. விசாரணையில், திருமலை எச்.வி.சி.பக்தர்கள் ஓய்வறையில் 641 என்ற எண்ணில் தங்கியிருந்த மகராஷ்டிர மாநிலம் நாசிக்கை சேர்ந்த சுதர்ஷன் என்ற பக்தர் தனது குடும்பத்தாருடன் சுவாமி தரிசனம் செய்ய திருமலைக்கு வந்துள்ளார். நேற்றிரவு அறையில் தூங்கி கொண்டிருந்தபோது யாரோ மர்ம நபர்கள் சூட்கேசை திருடிச் சென்றதாக திருமலை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தது தெரியவந்தது.
சூட்கேசில் இருந்த ரூ.41 ஆயிரம் ரொக்கபணம், 2 செல்போன் களை மர்ம நபர்கள் திருடிக்கொண்டு ஜிஎன்சி சோதனை சாவடி அருகே காலியாக சூட்கேசை வீசி விட்டு சென்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் திருப்பதி கோயிலில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு நிலவியது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !