ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் படுகொலை செய்த சிங்கள ராணுவத்தினருக்கு மீண்டும் மீண்டும் இந்தியாவிலேயே, அதிலும் தமிழ்நாட்டிலேயே பயிற்சி கொடுத்த இந்திய அரசு, கடந்த மே 27-ந் திகதி முதல் குன்னூர் வெலிங்டனில் உள்ள இந்திய ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் இலங்கை ராணுவத்தின் விங் கமாண்டர் தசநாயகேவுக்கும், மேஜர் ஹரிச்சந்திராவுக்கும் பயிற்சி கொடுத்து வருகிறது.
தமிழக முதல்-அமைச்சர், சிங்கள ராணுவதினரை உடனே வெளியேற்ற வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதினார். குன்னூர் வெலிங்டன் பயிற்சிக் கல்லூரியை அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தின. ஆனாலும் மத்திய அரசு, சிங்கள ராணுவத்தினரை வெளியேற்றவில்லை. மத்திய அரசின் இந்த மமதைப் போக்கு தமிழக மக்களின் மான உணர்ச்சிக்கும், சுய மரியாதைக்கும் விடப்பட்டுள்ள சவால் ஆகும்.
இந்த மண்ணில்தான் மொழிப்போரில் இந்திய ராணுவத்தினரின் துப்பாக்கிகளையே தமிழ் இளைஞர்கள் எதிர் கொண்டனர் என்பதும், ஈழத் தமிழர்களைக் காக்க முத்துக்குமார் உள்ளிட்ட 19 வீரத்தமிழ் இளைஞர்கள் மரணத் தீயை அணைத்துக் கொண்டனர் எனபதும் தமிழகத்தின் வீர வரலாறு ஆகும். ஆனாலும் இதனை எல்லாம் துச்சமாகக் கருதி தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக துரோகம் இழைத்து வினைவிதைத்து வரும் மத்திய காங்கிரஸ் அரசு, அதற்குரிய வினையை அறுவடை செய்யும் காலம் வந்தே தீரும்.
சிங்கள ராணுவத்தினரை வெளியேற்ற 18-ந் திகதி (செவ்வாய்கிழமை) காலை 11 மணி அளவில் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியை முற்றுகையிட பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வு அமைப்புகளும் முடிவு செய்து அறிவித்துள்ளன.
இந்த அறப்போரில் நீலகிரி, கோவை மாநகர், கோவை புறநகர் மாவட்டங்களைச் சேர்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்களும், கழக முன்னணியினரும், கழகத் தோழர்களும், ஈழத் தமிழர் உரிமை காக்கும் உணர்வாளர்களும், வணிகப் பெருமக்களும், மாணவர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !