தமிழகத்தில் சுமார் 20 கிலோ நிறையுடைய ஆட்டை விழுங்கியதால் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று நகர முடியாதபடி அதே இடத்தில் உள்ளது.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த பருவமலை வனப்பகுதியில், அதே பகுதியைச் சேர்ந்த பாலவிநாயகம் (வயது 42), நேற்று முன்தினம் பகலில் செம்மறி ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்.
மாலை 5 மணியளவில் சற்று தூரத்தில் மேய்ந்த ஒரு ஆட்டை காணவில்லை. இதனால் பாலவிநாயகம் தேடிச்சென்றார்.
அங்கு சுமார் 20 கிலோ எடையுள்ள ஒரு ஆட்டை, 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு விழுங்கி கொண்டிருந்தது. அதைபார்த்த பாலவிநாயகம் ஊருக்குள் சென்று வன அலுவலர்களை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு சென்றார்.
வனத்துறையினர் பாம்பை பிடிப்பதற்காக பெரியவலை மற்றும் கம்புகளை கொண்டு சென்றனர்.
பாம்பு நகர முடியாமல் கிடந்ததால் திரும்பி சென்றனர். இந்த நிலையில் நேற்றும் காட்டுப் பகுதிக்குள் சென்று வனத்துறையினர் மலைப்பாம்பை பிடிக்கவில்லை.
எனவே பாம்பை பிடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 3–வது நாளாக பாம்பு அங்கேயே கிடக்கிறது. பொதுமக்கள் இதனை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
சுமார் 20 கிலோ எடையுள்ள ஆட்டை மலைப்பாம்பு விழுங்கி இருப்பதால் அதனால் அந்த இடத்தில் இருந்து நகரமுடியாது. மேலும் ஆட்டை விழுங்கி உடல் பெருத்த நிலையில் மலைப்பாம்பு இருப்பதால் அதனை வலையைக் கொண்டோ, அல்லது கம்புகளைக் கொண்டோ தூக்கி எடுக்க முடியாது.
மீறி தூக்கினால், மலைப்பாம்பு கிழே விழுந்து அதன் எலும்புகள் முறிந்து செத்துவிடும் வாய்ப்பும் உள்ளது. மேலும், இந்த மலைப்பாம்பு 30 முதல் 35 கிலோவரை எடை இருக்கும்.
தவிர ஆட்டின் எடையும் 15 கிலோ வரை உள்ளது. எனவே மலைப்பாம்பை தூக்கினால் அதன் உயிருக்கு ஆபத்துதான் ஏற்படும்.
விழுங்கிய ஆட்டை மலைபாம்பு ஜீரணிப்பதற்கு சில நாட்களாவது ஆகும். அது அசையாமல் கிடந்தால் மட்டுமே இரை ஜீரணமாகும். எனவே இன்னும் 2 நாட்களுக்கு அந்த மலைப்பாம்பை பிடிப்பது சரியானதாக இருக்காது.
படிப்படியாக ஆட்டை ஓரளவு ஜீரணித்த பின்புதான் பாம்பை பிடிக்க முடியும் என வனதுறையினர் தெரிவித்தனர்.
பாம்பை பிடித்து அமிர்திவன பூங்காவுக்கு கொண்டு செல்ல ஆலோசனை செய்து வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !