பிரபல பாலிவுட் நடிகையாக இருப்பவர் தியா மிர்சா. இவர் ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் பிறந்தவர். மாடல் அழகியாகவும் விளங்கும் இவர், மிஸ் ஏசியா பசிபிக் அழகியாக பட்டம் பெற்றவர். இவர் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் இணைந்து நடத்துகின்றார். மேலும், இவர் சமூக சேவைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
ஐதராபாத் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள இவரது வீட்டிற்கு கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து தண்ணீர் வரி செலுத்தவில்லை. 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவரது கணக்கில் ரூ. 33 ஆயிரத்து 480 வரி பாக்கி இருந்தது. தற்போது வட்டியுடன் சேர்த்து ரூ. 2 லட்சத்து 26 ஆயிரம் கட்டவேண்டும் என்று ஐதராபாத் மெட்ரோபாலிடன் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் இறுதி கெடு (சிவப்பு எச்சரிக்கை) விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குடிநீர் வாரியம் இந்தத் தொகையை செலுத்த சொல்லி பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. ஆயினும் பணம் செலுத்தப்படாததால் 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒரு வீட்டின் உரிமையாளர் வீட்டில் இல்லாதபோது இணைப்பை துண்டிக்க சொல்லிவிட்டு செல்ல வேண்டும். தியாவின் சார்பில் அதுவும் செய்யப்படவில்லை என்று ஜுபிலி ஹில்ஸின் குடிநீர் வடிகால் வாரிய பொறுப்பாளரான பி. ஜே. ஸ்ரீநாராயணா தெரிவித்தார்.
தாங்கள் பலமுறை அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோதும் அவரது மானேஜர், தியா சினிமா படப்பிடிப்பில் பிசியாக இருப்பதாகவும், பணம் செலுத்த ஏற்பாடு செய்வதாக மட்டுமே கூறினார் என்றும் அவர் தெர்வித்தார்.
சிவப்பு எச்சரிக்கை என்ற இறுதி கெடு தகவல் கிடைத்த 15 நாட்களுக்குள் பணம் செலுத்தப்படுதல்வேண்டும். இல்லையெனில், குடிநீர் இணைப்பைத் துண்டிப்பதுடன், வருவாய் வசூல் சட்டத்தின் கீழ், குடிநீர் வாரியத்தின் தகவல் பதிவேட்டில் இணைக்கப்பட்டுள்ள அவரது அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் மூலம் வசூலிக்கப்படும் என்று குடிநீர் வாரியத்தின் எஸ்.ஆர் நகர் பிரிவு பொது மேலாளர் டி,ராமச்சந்திர ரெட்டி தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !