இந்தியாவின், டெல்லி பொலிஸ் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த வியடம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
பங்களாதேஷைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தெற்கு டெல்லியில் வசந்த் குஞ்ச் பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்களது மகள் 16 வயது இளம் பெண் அந்தப் பகுதியில் வீட்டு வேலைகள் செய்து வந்தார். நேற்று முன்தினம் திடீர் என்று அவள் மாயமாகி விட்டாள். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று அந்த இளம் பெண் ரிதாலா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் சுற்றித்திரிந்துள்ளார்.
இதைப் பார்த்த சிலர் இளம் பெண்ணை மீட்டு அருகில் உள்ள விஜய்விகார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பொலிஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் உடை மாற்றும் அறையில், அந்த பெண் தங்க வைக்கப்பட்டிருந்தாள். நேற்று மாலை 5 மணிக்கு அவள் பொலிஸ் நிலையத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். பொலிஸ்காரர் ஒருவர் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
பெற்றோரிடம் விசாரித்த போது அவளுக்கு திருமண ஏற்பாடு செய்து வந்ததாகவும் அந்த திருமணத்தில் அவளுக்கு விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் பெற்றோர் அவளது விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததால் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது.
வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறினாள். இதனால் பெற்றோர் பொலிசில் புகார் செய்தனர்.
ஆனால் மறுநாள் (நேற்று) தான் பொலிசில் ஒப்படைக்கப்பட்டாள். வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் எங்கு தங்கினாள், இளம் பெண் பொலிஸ் நிலையத்தில் இருக்கும் தகவலை பெற்றோருக்கு உடனே தெரிவிக்காமல் இறந்த பின்பு தெரிவித்தது ஏன் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
பெற்றோர் வந்து மகளின் சடலத்தைப் பார்த்து கதறி அழுதனர். பாதுகாப்புமிக்க பொலிஸ் நிலையத்துக்கு உள்ளேயே இளம் பெண் தற்கொலை செய்தது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அங்கு பணியில் இருந்த பொலிஸ்காரர்கள் இதை கவனிக்காமல் அஜாக்கிரதையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !