பாராளுமன்றத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதா மீதான வாக்கெடுப்பு நேற்றிரவு நடைபெற்ற போது சோனியா காந்திக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து, அவரது மகனும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ராகுல் காந்தி உடனடியாக சோனியா காந்தியை பாராளுமன்ற அவையில் இருந்து நேற்றிரவு 8.15 மணி அளவில் வெளியே அழைத்துச் சென்றார்.
டெல்லியில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார். ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றுசேர்ந்தபோது களைப்பாக இருந்ததாக சோனியா காந்தி தெரிவித்தார். இதனையடுத்து, அவருக்கு இதய பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவில் இருந்தே தனக்கு காய்ச்சல் இருப்பதாக சோனியா காந்தி கூறிவந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. உணவுப் பாதுகாப்பு மசோதா வர காரணமாக இருந்த சோனியா காந்தி, அம்மசோதா நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது நேரில் பார்க்க முடியாத நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு வருத்தத்தை அளித்தது.
இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சோனியா காந்தியை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பின்னிரவு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். வைத்தியசாலையின் பின்வாசல் வழியாக திடீரென அவர் கார் வந்து நின்றது. நேராக தீவிர சிகிச்சை பிரிவுக்கு சென்ற மன்மோகன் சிங், சிறிது நேரம் சோனியா காந்தியிடம் பேசிக் கொண்டிருந்தார்.
உடல்நலக் குறைவுக்காக சோனியா காந்தி சாப்பிட்ட சில மாத்திரைகளின் பக்கவிளைவால் ஏற்பட்ட பாதிப்பு தான் தற்போதைய உடல்நலக் குறைவுக்கு காரணம் என்று கூறப்பட்டது. மன்மோகன் சிங்கை அடுத்து சோனியா காந்தியை பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார், மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத், டெல்லி முதல் அமைச்சர் ஷீலா தீக்சித், ஹரியான முதல்அமைச்சர் பூபேந்திர சிங் ஹூடா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.
சோனியா காந்தியுடன் அவரது மகள் பிரியங்கா காந்தி, மருமகன் ராபர்ட் வதேரா ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் தங்கியிருந்தனர். இ.சி.ஜி. உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், கவலைப் பட ஏதுமில்லையென்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் சோனியா காந்தி வீடு திரும்பினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !