Headlines News :
Home » » சிறுவர்களை கடத்தி பிச்சை எடுக்க வைத்து பணம் வசூலித்த வாலிபர்!

சிறுவர்களை கடத்தி பிச்சை எடுக்க வைத்து பணம் வசூலித்த வாலிபர்!

Written By TamilDiscovery on Wednesday, August 28, 2013 | 1:08 AM

சென்னையில் பல இடங்களில் சிறுவர்களை கடத்தி பிச்சை எடுக்க வைத்து பணம் வசூல் செய்த வாலிபர் பொலிஸ் விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமிழகத்தின் சென்னை கோயம்பேடு தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் சேகர். அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகன் முகேஷ் (வயது 6) அதே பகுதியில் உள்ள தனியார் பாடசாலையில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று இரவு முகேஷ் அருகில் உள்ள சேமாத்தம்மன் நகர் 3-வது தெருவில் வசிக்கும் உறவினர் பத்மநாபன் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டு இருந்தான்.

அப்போது அங்கு வந்த மர்ம வாலிபர் முகேசுடன் பேச்சு கொடுத்து சாக்லேட் வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட அவன் சிரித்து பேசியபடி மர்ம வாலிபருடன் நடந்து சென்றான். தெருமுனைக்கு சென்றதும் திடீரென அந்த வாலிபர் சாக்கு பைக்குள் முகேசை தூக்கி போட்டு கட்டினான். பின்னர் சாக்கு மூட்டையை தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தான். இதில் பயந்து போன முகேஷ் கூச்சலிட்டான். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். சாக்கு பையை பார்த்தபோது சிறுவன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த வாலிபரை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர்.

சிறுவனை சாக்கு மூட்டையில் கட்டி கடத்த முயன்ற சம்பவம் பற்றி அறிந்ததும் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

முகேசின் தாய் சித்ரா மற்றும் உறவினர்களும் கதறி அழுதபடி அங்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கோயம்பேடு பொலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் மற்றும் பொலிசார் விரைந்து வந்து வாலிபரை கைது செய்து விசாரித்தனர். அவன் தாம்பரம், முத்து மாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தாமோதரன் என்பதும், குழந்தையை பிச்சை எடுக்க வைக்க கடத்தி செல்ல முயன்றதும் தெரிந்தது.

பொலிசில் தாமோதரன் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, தெருக்களில் தனியாக நிற்கும் சிறுவர் - சிறுமி களிடம் நைசாக பேசி சாக்லேட் வாங்கி கொடுத்து கடத்தி சென்று, பின்னர் பிச்சை எடுக்க வைப்பேன். இதற்கு சம்மதிக்காத சிறுவர்களுக்கு சூடு வைத்து பணிய வைப்பேன். அவர்களை பஸ்நிலையம், சிக்னல், கோயில் அருகே ஒரு நாள் மட்டுமே பிச்சை எடுக்க வைத்து அந்த பணத்தை வசூலிப்பேன்.

பொலிசில் சிக்காமல் இருக்க சிறுவனை அங்கேயே விட்டு விடுவது வழக்கம்.

இதனால் மகன் - மகள்கள் கிடைத்த மகிழ்ச்சியில் பெற்றோர் புகார் கொடுப்பதில்லை. இதனை எனக்கு சாதகமாக பயன்படுத்தி பல சிறுவர்களை கடத்தி பிச்சை எடுக்க வைத்துள்ளேன். கடந்த 2 நாட்களாக கோயம்பேடு பஸ் நிலையம் பகுதியில் நோட்டமிட்டும் எந்த சிறுவர்களும் தனியாக சிக்கவில்லை. இதனால் அப்பகுதியிலேயே சுற்றி திரிந்தேன். அப்போது தெருவில் தனியாக இருந்த முகேசை கடத்தினேன்.

இவ்வாறு அவன் கூறி உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஆனால் இதுவரை தாமோதரன் மீது எந்த வழக்கும் இல்லை. குழந்தை கடத்தலில் அவனுக்கு பின் பெரிய கும்பல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சாக்கு மூட்டையில் சிறுவனை கடத்திச் சென்றபோது, அவனுக்கு உதவ மர்ம நபர்கள் வாகனங்களில் வந்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து தாமோதரனை இரகசிய இடத்தில் வைத்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பின்னர் குழந்தை கடத்தலில் மேலும் பலர் சிக்குவார்கள் என தெரிகிறது.

இது குறித்து சித்ரா கூறும் போது, ´´கடத்தப்பட்ட எனது மகன் மீட்கப்பட்டது மிகவும் சந்தோஷம். அவன் கடத்தப்பட்டதை நினைத்தாலே பயமாக உள்ளது. முகேசை படிக்க வைத்து பெரிய அதிகாரி ஆக்க வேண்டும் என முடிவு செய்து உள்ளோம். அவனை கடத்தியவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்´´ என்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரிமுனையில் உள்ள லாட்ஜில் மனநோயாளிகளை அடைத்து அவர்களை பிச்சை எடுக்க வைத்த போலி மருத்துவர், நர்சுகள் கைது செய்யப்பட்டனர். தற்போது பிச்சை எடுக்க வைப்பதற்காக சிறுவனை கடத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை கடத்தல் கும்பலை கூண்டோடு பிடிக்க பொலிசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template