சவுதி அரேபியாவில் உள்ள அபுலஹப் என்ற குக்கிராமத்தை சேர்ந்த 100 வயது முதியவர் கடந்த புதன் கிழமை மசூதிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும் வழியில் சுருண்டு விழுந்து மரணமடைந்தார்.
கணவரின் மரண செய்தி கேட்டு அவருடன் 70 ஆண்டுகள் தாம்பத்தியம் நடத்திய அவரது 90 வயது மனைவி பதறியடித்துக் கொண்டு அவர் விழுந்துக் கிடந்த இடத்திற்கு ஓடினார். கணவரின் பிரேதத்தை தூக்க முயற்சித்த அவர் பிரேதத்தின் மீது விழுந்து இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார்.
அபுலஹப் குக்கிராமத்தில் முதன்முதலாக குடியேறிய இந்த தம்பதியர் மகன்கள், மகள்கள், பேரன்-பேத்திகள், கொள்ளுப்பேரன்-கொள்ளுப் பேத்திகள், எள்ளுப்பேரன், எள்ளுப்பேத்திகள் என புதியதொரு கிராமமாக சுமார் 200 வாரிசுகளை உருவாக்கி விட்டு மறைந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்தம்பதியினரை அவர்களின் கொள்ளுப் பேரன்களில் ஒருவர் வந்து சந்தித்துள்ளார். அப்போது, அந்த முதியவர் ´எனது இறுதி நாட்கள் நெருங்கி விட்டதாக உணருகிறேன். இவ்வளவு நாள் என்னுடன் சேர்ந்து வாழ்ந்த என் மனைவியை போகும் போதும் என்னுடனே அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறேன்´ என்று கூறியுள்ளார்.
அவர்கள் எவ்வளவு அன்பு, அரவணைப்பு, உண்மை, தியாகம் ஆகிய நற்குணங்களுடன் வாழ்ந்துள்ளனர் என்பதை இந்த மரணம் உறுதிபடுத்தி விட்டது. அவர்களின் வேண்டுதலை இறைவன் நிறைவேற்றி விட்டான் என நாதழுதழுக்க அந்த கொள்ளுப்பேரன் கூறினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !