உல்லாச நகரமான கோவாவில் உள்ள பனாஜியில் குத்தாட்டம் போட்ட உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. மகேந்திர சிங்கை கோவா போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பனாஜி நகரில் உள்ள நடன விடுதி ஒன்றில் குத்தாட்டம், கும்மாளம் மற்றும் விபசாரம் நடப்பதாக கோவா போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, அந்த விடுதிக்கு விரைந்த போலீசார், தன்னிலை மறந்து போதையில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த சிலரை கைது செய்தனர்.
பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 6 பெண்களையும் அந்த விடுதியில் இருந்து போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. மகேந்திர சிங் என்பதை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
உத்தரபிரதேச சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான இவரது மாமனார் அஜய் பிரகாஷ் சிங், முலாயம்சிங் யாதவிற்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.எல்.ஏ. மகேந்திர சிங் குத்தாட்ட விடுதியில் கைது செய்யப்பட்ட தகவலை முறைப்படி உத்தரபிரதேச சபாநாயகருக்கு தெரிவித்து விட்டதாக கோவா போலீசார் தெரிவித்தனர்.
அவர் மீதும் அவருடைய கூட்டாளிகள் இருவர் மீதும் விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குத்தாட்ட விடுதியில் தனது கட்சி எம்.எல்.ஏ. போலீசாரிடம் சிக்கிய செய்தியை அறிந்த உ.பி. முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் அதிர்ச்சியடைந்தார்.
இதற்கு முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. சச்சின் ஜெய்ச்வால் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயமடைந்தார். இதே போல், ரேபரேலியின் பச்ரவான் தொகுதி எம்.எல்.ஏ. ராம்லால் அகோலாவின் மகன்கள் தங்களுக்கு 20 லட்சம் ரூபாயை தரமறுத்த அரசு டாக்டரின் வீட்டை கடந்த சனிக்கிழமை புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கியதாக செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து, மேற்கண்ட 3 எம்.எல்.ஏ.க்களையும் கட்சியில் இருந்து நீக்கி உ.பி. முதல் மந்திரியும், அம்மாநில சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் நேற்று உத்தரவிட்டார். இதே போல், 'ஹேமா மாலினி, மாதுரி தீட்சித் ஆகியோரின் கன்னங்களைப் போல் பளபளப்பான சாலைகளை அமைத்து தருவேன்' என வாக்குறுதி அளித்த மந்திரியையும், மேலும் 2 எம்.எல்.ஏ.க்களையும் அகிலேஷ் யாதவ் கட்சியை விட்டு நீக்கியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
தற்போது 3 எம்.எல்.ஏ.க்களும் ஒரே நாளில் நீக்கப்பட்டுள்ளது, கட்சிக்கு யாரும் அவப்பெயரை ஏற்படுத்தக் கூடாது என்று அகிலேஷ் யாதவ் விடுத்துள்ள எச்சரிக்கையாகும் என சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !