அப்பாவி மக்கள் மீது ரசாயன ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய சிரியாவுக்குப் பதிலடி கொடுக்கும் நோக்கில் அமெரிக்கக் கடற்படை, அந்நாட்டை நோக்கி நகர்ந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, தேசியப் பாதுகாப்புக் குழுவினருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
சிரியாவில் அதிபர் பஷார் அல்-அஸாதின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது ராணுவம் கடும் நடவடிக்கை எடுத்தது. அதன் ஒரு பகுதியாக மக்கள் மீது கடந்த புதன்கிழமை ரசாயனத் தாக்குதலும் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
ரசாயனத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் படங்கள் சமீபத்தில் வெளியாகி, சர்வதேச அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன.
சொந்த நாட்டு மக்கள் மீதே இத்தகைய கோரமான அடக்குமுறையை மேற்கொண்டு வரும் சிரியா அரசுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், அப்பாவி மக்கள் மீது ரசாயனத் தாக்குதல் நடைபெற்றது மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்தார். அவர், தேசியப் பாதுகாப்புக் குழுவினருடன் அவசர ஆலோசனை நடத்தினார். சிரியாவில் கடந்த வாரம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல்களையடுத்து, அதற்கு என்ன பதிலடி தருவது என்பது குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் நோக்கில் அமெரிக்கா படைகளை நகர்த்தி வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
"சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அதிபர் ஒபாமா ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்காக அமெரிக்க கமாண்டர்கள் தயார்நிலையில் உள்ளனர்'' என்றார். குறிப்பாக, சிரியா ராணுவம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்த ஒபாமா நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறிவரும் குற்றச்சாட்டு உறுதியாகும்பட்சத்தில் அந்நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்தலாம் என்று பிரான்ஸ் கருத்து தெரிவித்துள்ளது. இதனிடையே, ஐ.நா. துணைச் செயலாளர் ஏஞ்சலா கெய்ன் சனிக்கிழமை சிரியா தலைநகர் டமாஸ்கஸ் சென்றடைந்தார். சிரியாவில் ரசாயன ஆயுதங்களால் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து ஐ.நா. நிபுணர்கள் விசாரணை நடத்த அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசிடம் அவர் கோர உள்ளார். இதற்காக, சிரியா அரசுப் பிரதிநிதிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார்.
சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமற்ற, விரிவான விசாரணை தாமதமின்றி நடத்தப்பட வேண்டும் என்று பான் கீ மூன் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளார்.
ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை என்று சிரியா அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. அதேபோல், சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு அதன் தோழமை நாடான ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இரசாயன குண்டுத் தாக்குதல்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !