14-வது உலக தடகள சம்பியன்ஷிப் போட்டி ரஷிய தலைநகர் மொஸ்கோவில் கடந்த 10-ம் திகதி தொடங்கியது. 206 நாடுகளை சேர்ந்த 1974 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது.
கடைசி நாளான நேற்று ஆண்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஜமைக்கா தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியது.
ஜமைக்கா அணியில் நெஸ்டா கர்ட்டர், கெமார் பெய்லி, நிக்கேல் ஆஷ்மிதே, உசேன் போல்ட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் உலகின் அதிவேக வீரரான உசேன் போல்ட், கடைசி வீரராக ஓடி எல்லைக்கோட்டை வெற்றிகரமாக கடந்தார். அந்த அணி 37.36 வினாடியில் இலக்கை கடந்து முதலிடத்தை உறுதி செய்தது. இதில் அமெரிக்காவுக்கு வெள்ளியும் (37.66 வினாடி), கனடாவுக்கு (37.92 வினாடி) வெண்கலமும் கிடைத்தது.
முதலில் இங்கிலாந்து தான் 3-வது இடத்தை பிடித்தது. பிறகு விதிமீறியதாக அந்த அணி தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
ஏற்கனவே 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்திலும் மகுடம் சூடிய 26 வயதான உசேன் போல்ட்டுக்கு, இந்த தொடரில் இது 3 -வது தங்கமாகும்.
ஒட்டுமொத்தத்தில் உலக தடகளத்தில் அவரது 8-வது தங்கமாக இது அமைந்தது. இதற்கு முன்பாக 2009-ம் ஆண்டு 3 தங்கமும், 2011-ம் ஆண்டு 2 தங்கமும் சுவைத்திருந்தார். இதன் மூலம் 30 ஆண்டுகால உலக தடகள வரலாற்றில் அதிக தங்கப் பதக்கங்களை வென்றவர்களான அமெரிக்காவின் கார்ல் லிவிஸ், ஜான்சன், அமெரிக்க வீராங்கனை அலிசன் பெலிக்ஸ் ஆகியோரின் (தலா 8 தங்கம்) உலக சாதனையை உசேன் போல்ட் சமன் செய்தார். உசேன் போல்ட் உலக போட்டியில் 8 தங்கத்தை தவிர, 2 வெள்ளிப்பதக்கமும் (2007-ம் ஆண்டு) வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் ஜமைக்காவே (41.29 வினாடி) முத்திரை பதித்தது.
இதில் 4 பேர் குழுவில் அங்கம் வகித்த வீராங்கனைகளில் ஷெல்லி-அன் பிராசெர் பிரைசும் அடங்குவார். 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்திலும் தங்கத்தை வசப்படுத்திய பிராசெருக்கு இது 3-வது தங்கமாகும்.
பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் கென்ய வீராங்கனை யுனைஸ் ஜெப்கோய்ச் சம் 1 நிமிடம் 57.38 வினாடிகளில் பந்தய தூரத்தை அடைந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். நடப்பு சாம்பியனும், ஒலிம்பிக் சாம்பியனான ரஷியாவின் மரியா சவினோவாவினால் இந்த முறை வெள்ளிப்பதக்கமே (1:57.80) பெற முடிந்தது.
ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் கென்ய வீரர் அஸ்பெல் கிப்ரோப் (3 நிமிடம் 36.28 வினாடி) சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.
பெண்களுக்கான ஈட்டி எறிதலில் ஜெர்மனி வீராங்கனை கிறிஸ்டினா ஓபெர்க் போலும் (69.05 மீட்டர் தூரம்), ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப்பில் பிரான்ஸ் வீரர் டெட்டி தாம்ஹோவும் (18.04 மீட்டர் நீளம்) முதலிடத்தை பிடித்தனர். டிரிபிள் ஜம்ப்பில் நடப்பு சாம்பியனும், ஒலிம்பிக் சாம்பியனுமான அமெரிக்காவின் கிறிஸ்டியன் டெய்லர்(17.20 மீட்டர் நீளம்) 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
கடந்த 9 நாட்களாக நடந்த இந்த தடகள திருவிழாவின் முடிவில் போட்டியை நடத்திய ரஷியா 7 தங்கம் உள்பட 17 பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்தது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !