யாழில் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று இரவு 7.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிகை ஒன்றின் அலுவலக செய்தியாளர் குணாளன் டிலீப்அமுதன் (வயது 24) என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். தனது பணியினை முடித்துக் கொண்டு இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும் போது ஓட்டோவில் வந்த இனந்தெரியாத நபர்கள் மகாஜனக் கல்லூரிக்கு அருகில் வைத்து இவரை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆரம்பம் முதல் யாழில் உள்ள ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகை விநியோகிஸ்தர்கள் மீதும் மர்ம நபர்கள் தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர்.
கடந்த 7 மாதங்களுக்குள் 6ற்கும் மேற்பட்ட ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகவுள்ள நிலையில் நேற்றும் ஒரு ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !