Headlines News :
Home » » உங்களை அடிமையாக்கும் பத்து விடையங்கள்!

உங்களை அடிமையாக்கும் பத்து விடையங்கள்!

Written By TamilDiscovery on Wednesday, July 10, 2013 | 12:48 PM

நாம் அனைவரும் தினந்தோறும் ஏராளமான செயல்களைச் செய்கிறோம். இவ்வாறு தினமும் செய்யும் செயல்களில், சில செயல்களை மட்டும் நாம் மிகவும் விரும்பிச் செய்வோம். சிலவற்றை செய்ய வேண்டும் என்பதற்காகச் செய்வோம்.

இவ்வாறு செய்யும் செயல்களை நமது விருப்பத்தேர்வின் அடிப்படையில் மூன்று வகைகளில் அடக்கலாம்.

* கடமைக்காகச் செய்பவை:
பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்துக்காக இதனைச் செய்வோம்.

* நமக்காகச் செய்பவை:
நமக்குத் தேவையான பிடித்தமான விஷயங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து நேர்த்தியாகச் செய்வோம்.

* நம்மையறியாமல் செய்பவை:
தேவையிருந்தாலும்,  தேவையில்லாவிட்டாலும், இவ்விஷயத்தை நாம் நம்மையறியாமல் செய்திருப்போம் அல்லது செய்து கொண்டிருப்போம். அதுவும் எப்போது தொடங்கினோம் என்று நமக்கே தெரியாது. அப்படியாயின், இச்செயல்களுக்கு நாம் அடிமையாக இருக்கிறோம் என்று பொருள். இப்படி பலர் தெரியாமல், சில விஷயங்களுக்கு அடிமையாவிடுகின்றனர். இப்போது இங்கு உலகமெங்கும் மேற்கொண்ட கணக்கெடுப்புகளின் வாயிலாக, அனைவரையும் அடிமைப்படுத்தும் சில ஆச்சரியமான செயல்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இணையதளம்:
பொழுதைக் கழிப்பதற்கு இனிமையான வழிகளில் ஒன்று தான் இணையதளத்தில் உலாவுதல் என்று தான் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சீனாவில் மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி, மதுவும், போதைப்பொருட்களும் மனதை எப்படி அடிமைப்படுத்துகின்றனவோ, அதே போல் இணையதளத்தில் உலாவுதலும் மனதை அடிமைப்படுத்துகின்றது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளத்தில் உலாவுதலுக்கு அடிமையானவர்கள் (Internet addiction disorder (IAD)), இதர வகை அடிமைத்தனங்களுக்கு ஆட்பட்டவர்களைப் போலவே பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காதல் வயப்படுதல்:
உறவு விட்டு உறவு தேடுபவர்கள் ஒரு ஐந்து நிமிடம் கூட தனித்திருப்பதை கண்டிருக்கமாட்டோம். அத்தகையவர்களை காதல் வயப்படுவதற்கு அடிமையானவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதயம் படபடக்க, உணர்வுகள் ஊற்றெடுக்க, காதலில் விழுதல் என்பதும் ஒரு போதை தான். அதற்கு அடிமையாவது என்பது எளிது. மேலும் காதலுக்கு அடிமையாவதைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட ஆர்தர் ஆரோன் எனப்படும் உளவியலாளரது கூற்றுப் படி, காதலில் விழுவதும் கூட இதர வகை போதை மருந்துகளுக்கு அடிமையாவதைப் போலவே மூளையில் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம். அதுமட்டுமல்லாமல் இவ்வாறு காதலுக்கு அடிமையானவர்கள், ஒரு காதல் மறையத் தொடங்கும் போது, மற்றொரு உறவைத் தேடி ஏங்கத் தொடங்குவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

சர்க்கரை:
இனிப்பை விரும்பாதவர்கள் எவருமே இருக்க முடியாது. நினைவு தெரிந்த நாள் முதல், அனைவரும் சர்க்கரை சேர்த்த இனிப்பான பொருட்களை ஆர்வத்தோடு சாப்பிட்டு வந்திருக்கிறோம். ஆனால் அவற்றில் குறிப்பிட்ட சில வகையான சாக்லெட் அல்லது பிஸ்கெட் போன்றவற்றிற்கு அடிமையாகியிருப்போம் என்று நினைத்திருப்போமா? சர்க்கரை சேர்த்த உணவுப் பொருட்களை சாப்பிடும் பொழுது, ஓபியாட் எனப்படும் வேதிப்பொருள் மூளையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த வேதிப்பொருள் மட்டற்ற இன்பமான உணர்வை உண்டாக்கும். ஆகவே தான் இனிப்புகள் இல்லாத பொழுது, இந்த இன்பமான உணர்வுக்கு ஏங்குகிறோம் என்று ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன. அதிலும் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் ஒரு குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் படி, சர்க்கரையானது, ஆல்கஹால் மற்றும் சிகரெட் ஆகியவற்றைப் போல, தீமையை உண்டாக்கும் மற்றும் அடிமைப்படுத்தும் தன்மை கொண்டது ஆகும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பச்சை குத்திக் கொள்ளுதல்:
பச்சை குத்திக் கொள்ளுதலும் ஒருவிதமான அடிமைப்படுத்தும் செயல்களுள் ஒன்றாகும். ஏனெனில் பச்சை குத்திக் கொள்ளும் போதோ அல்லது வேறு இடங்களில் ஊசியால் குத்திக் கொள்ளும் போதோ வெளியிடப்படும், என்டார்ஃபின்கள் வலியை மறக்க உதவுவதோடு, மனதில் அதற்கு அடிமையாகும் எண்ணங்களையும் ஊன்றிவிடுகிறது. இது ஒரு உண்மையான அடிமைப்படுதலா என்பதில் விவாதங்கள் இருந்தாலும், உலகெங்கும் இலட்சக்கணக்கானவர்கள் உடலெங்கும் தோடுகளைக் குத்திக் கொண்டும், பச்சை குத்திக் கொண்டும் திரிகிறார்கள் என்பது உண்மை தானே?

வேலை:
பெரும்பாலானோர் வார இறுதி விடுமுறை நாட்களுக்காக ஏங்கிக் கொண்டு இருக்கும் போது, வேலை வேலை என்று வேலைக்கு அடிமையாகிக் கிடப்பவர்கள் அலுவலகத்தை விட்டு வெளியில் இருந்தால் மிகவும் ஏங்கிப் போவார்கள். இம்மாதிரி வேலையே கதியென்று வேலைக்கு அடிமையாகியவர்களுக்கு, ஒர்க்கஹாலிக் (workaholic) என்று ஜாலியாகப் பெயரிட்டு அழைக்கிறோம். இது கடின உழைப்பு மட்டுமல்ல. உடல் ஆரோக்கியம் மற்றும் உறவு ஆகியவற்றைப் பாதிக்கும் ஒருவித மனநிலையுமாகும். மேலும் ஸ்பெயினில் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, ஸ்பெயினில் உள்ள 12% பேர் வேலையே கதி என்று இருக்கிறார்கள் என்றும், ஜப்பானில் ஆண்டுக்கு 1000 பேர் அதிகமான வேலையால் மரணமடைகிறார்கள் என்றும் சொல்கிறது.

டேன்னிங் (Tanning):
டேன்னிங் எனப்படுவது சருமத்தின் நிறத்தை பொலிவுபடுத்த செய்யப்படும் ஒரு அழகு சிகிச்சையாகும். இதற்கென சூரியப்படுக்கை (sun beds), டேன்னிங் படுக்கை (tanning beds) ஆகியவைகள் உள்ளன. சூரிய ஒளி அல்லது டேன்னிங் படுக்கை மூலம், புற ஊதாக் கதிர்களை சருமத்தின் மேல் பாய்ச்சுவதால், போதை மருந்துக்கு அடிமையாவது போன்ற மாற்றத்தினை, அவை மூளையில் ஏற்படுத்துகிறது என்று அடிக்சன் பயாலஜி எனப்படும் மாத இதழில் வெளியான கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. மேலும் தொடர்ந்து இந்த சிகிச்சை முறையை செய்து வந்தால், அது டேன்னிங்கிற்கு அடிமைப்படச் செய்துவிடும்.

அதிலும் டாக்டர். பிரையன் அடினாஃப் என்னும் டேன்னிங் ஆராய்ச்சியாளர், மூளையின் பகுதிகளில் புற ஊதாக் கதிர்கள் படுவதால், டேனொரெக்ஸியா (Tanorexia) எனப்படும் டேன்னிங் போதைக்கு நம்மை அடிமைப்படச் செய்து விடுகிறது என்று சொல்கிறார். அதுமட்டுமல்லாமல், டேன்னிங் செய்து கொள்வது உடலுக்கு மிக மோசமான ஆபத்தை ஏற்படுத்தும் என்பது மற்றொரு ஆபத்து ஆகும்.

வீடியோ விளையாட்டுக்கள்:
உலகமெங்கும் உள்ள இளைஞர்களும், சிறார்களும், வீட்டிலோ வெளியிலோ கணிப்பொறி அல்லது தொலைக்காட்சி முன் அமர்ந்து கொண்டு, வீடியோ விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். இது பார்ப்பதற்கு சாதாரணமானதாக இருந்தாலும், அவை மிகவும் தீவிரமான தீமையை உண்டாக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 2006 ஆம் ஆண்டு பிபிசி-யால் ஒளிபரப்பப்பட்ட ஒரு சொற்பொழிவின் படி, ஆன்லைனில் வீடியோ விளையாட்டு விளையாடும் 12% பேர் அதற்கு அடிமையாகியிருப்பதோடு, இவ்வாறு வளர்ந்து வரும் அடிமைத்தனத்திற்கு சிகிச்சையளிப்பதற்காக, பல நாடுகள், சிகிச்சை மையங்களை அமைத்துள்ளன.

மேலும் மற்ற போதைகளைப் போலவே, இந்த மாதிரியான விளையாட்டுக்களை விளையாடுவது, உறவுகளையும், வேலையையும் கெடுக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. குறிப்பாக இந்த செயலால் உயிரை விட்டவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாப்பிங் செய்வது:
நம்மில் பெரும்பாலானோர் புதிய பொருட்களை வாங்குவதற்கு விரும்புவோம். அதிலும் அன்பிற்குரியவர்களுக்குப் பரிசுகள் வாங்குவதையும், புதிய மின்னணுப் பொருட்களையும் வாங்க பெரிதும் ஆசைப்படுவோம். ஆனால் சிலருக்கு புதிய பொருட்களை ஷாப்பிங் செய்வது மிகப்பெரிய போதையாக மாறிவிடுகிறது.

உடலில் என்டோர்பின்கள் மற்றும் டோபமைன்கள் அதிகமாகச் சுரப்பதால், இவ்வாறு ஷாப்பிங் செய்யும் போதை ஏற்படுகிறதாம். மேலும் வாழ்வில் எதிர்மறை எண்ணங்களை மறக்கவும், எதிர்மறை சூழ்நிலைகளிலிருந்து தப்பிக்கவும், ஷாப்பிங்கை ஒரு காரணியாக அடிமைப்பட்டவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் இப்போதையானது நிதி ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

லிப் பாம்:
ஆல்கஹால் அல்லது சிகரெட் போன்ற வேதிப்பொருட்களால் ஆனது இல்லை என்றாலும், லிப் பாம்( Lip balm) எனப்படும் உதட்டுச் சாயம் அடிமைப்படுத்தும் ஒரு விஷயமாகும். லிப் பாமை உதட்டில் தடவும் போது, தற்காலிகமாக ஒரு ஈரத்தன்மையை உண்டாகுகிறது. வறண்டு போன உதடுகளுக்கு, இது உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. மேலும், லிப் பாம் தடவுவதால், இயற்கையான ஈரத்தன்மை உருவாவது பாதிக்கப்பட்டு, ஈரத்தன்மையைப் பேணுவதற்கு மேலும் மேலும் லிப் பாம் தடவும் எண்ணத்தை உண்டாக்குகிறது.

இது உயிருக்கு ஆபத்தைத் தரும் போதை அல்ல என்றாலும், செலவு அதிகம் பிடிக்கும் இந்த போதையைத் தடுப்பதற்கென நிறைய ஃபேஸ்புக் குழுக்கள் உருவாகியுள்ளன.

இசை:
அனைவருமே இசையை ரசிப்போம். ஒவ்வொருவருக்கும் பிடித்தமான சில பாடல்கள் இருக்கும். அவற்றைத் திரும்பத்திரும்ப கேட்டு ரசிப்போமல்லவா? ஆனால் அவ்வாறு பிடித்த அப்பாடல்களுக்கு அடிமையாகிவிட்டோம் என்று என்றாவது நினைத்தது உண்டா? மெக்கில் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, இசைக்கு அடிமையாவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளனவாம். இந்த ஆய்வின்படி, பிடித்தமான பாடல்களைக் கேட்கும் போது, உடலுக்குள் ஒரு போதை உண்டாகி, உடலில் உள்ள டோபமைன்களானது அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

டோபமைன் என்பது மனிதர்கள் போதைப் பொருளட்களை உட்கொள்ளும் போது, உடலில் அதிகமாகச் சுரக்கும் ஒரு வேதிப்பொருள். மனம் உணரும் போதைக்கு இதுதான் காரணம். ஆராய்ச்சியாளர்களின் கருத்துப் படி, ஒரு செயலைத் திரும்பத் திரும்பச் செய்ய விரும்புவதற்கு டோபமைன் தான் காரணமாம்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template