தன்னுடைய அகரம் பவுண்டேஷன் மூலம், குமரியில் வசித்து வரும் இலங்கை மாணவி தினுசியா பொறியியல் துறையில் படிக்க உதவியுள்ளார் நடிகர் சூர்யா. குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள ஈழத்து அகதிகள் முகாமில் வசிக்கும் செல்வி தினுசியா பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் கலந்து கொண்டார்.
அதில், தினுசியாவிற்கு நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. அக்கல்லூரியில் தமிழ் உணர்வாளர்கள் ரூபாய் 25,000 பணம் கட்டி தினுசியாவை சேர்த்தனர். ஆனால் அதற்கு மறுநாளே நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் இருந்து தினுசியாவிற்கு அழைப்பு வந்தது.
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலையில் பொறியியல் படிக்க இடம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் நான்கு ஆண்டுகள் படிப்பிற்க்கான செலவையும் உணவு மற்றும் விடுதிக்கான செலவையும் அகரமே ஏற்க உள்ளதாக தெரிவித்தனர்.
அதனால் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் தினுசியா கட்டிய பணம் திருப்பிக் கேட்க பணத்தை கல்லூரி நிறுவனம் திரும்ப அளித்தது. அந்த பணத்தை அகதிகள் முகாமில் உள்ள மற்ற மாணவர்களின் கல்லூரி சேர்க்கைக்கு பயன்படுத்துவதாக மார்த்தாண்டம் அகதிகள் முகாமின் தலைவர் பிரேம் கூறினார்.
ஈழத்தில் இருந்து வந்து அகதிகள் முகாமில் இத்தனை ஆண்டுகள் காலத்தை கழித்த தினுசியாவிற்கு இனி புதிய அனுபவம் சென்னையில் காத்துக் கொண்டிருக்கிறது. அகதிகள் முகாமில் இருந்து எஸ்.ஆர்.எம் பல்கலையில் இடம் பிடித்த ஒரே மாணவி செல்வி தினுசியா தான் என்பது மற்றுமொரு பெருமையான தகவல்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !