ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட பாதுகாப்பு பிரிவினரை சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வதற்காக சர்வதேச ரீதியில் மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு என்ற ரீதியில் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென வெளிஉறவுகள் அமைச்சின் செயலர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். சனல் 04 தொலைக்காட்சிப் பணிப்பாளர் கெலம் மெக்ரேயின் கூற்று தொடர்பாக அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடபில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:
பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் புலிகளின் ஆதரவாளர்கள் தமது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை நிறைவேற்றும் நோக்குடன் இலங்கையின் கீர்த்திக்கு ஊறுவிளைவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கனடாவிலுள்ள இலங்கைத் தூதுவர் சித்ராங்கனி வாகீஸ்வரவும், ரொறன்ரோவிலுள்ள கொன்சியூலர் கருணாரத்ன பரனவித்தாரனவும் இந்த மாநாடு நடத்தப்படுவது தொடர்பாக அந்த அமைப்பாளர்களிடம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாகவும் வெளிஉறவுத்துறை செயலர் அமுனுகம தெரிவித்தார்.
சனல்4 பணிப்பாளர் மக்ரே பல தடவைகள் இலங்கையை விமர்சித்துள்ளார். சமாதானம், சகவாழ்வு, இன ஐக்கியம் ஆகியவற்றுக்கு எதிராக இவர் செயற்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக பல்வேறு கட்டங்களில் அதிருப்தியையும் இவர் வெளியிட்டிருப்பதாகவும் செயலர் தெரிவித்தார். இவர் ஊடகவியலாளர் என்ற போதும் அவரின் செயற்பாடுகள், கீழ் மட்டத்தில் இருந்துள்ளன. தனது சொந்த பிரசாரத்துக்காக அவர் இவ்வாறு செயற்பட்டுள்ளார். இவர் இலங்கையின் தேசிய ஐக்கியத்துக்கு அச்சுறுத்தல் கொடுத்துள்ளார்.
இத்தகைய வேளைகளில் அதற்கு எதிராக சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென்றும் செயலாளர் தெரிவித்தார்.
அதேவேளை, கனடாவில் நடைபெற்ற மாநாட்டுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனுக்கும் அழைப்பு கிடைத்துள்ளது. அவர் மாநாட்டில் பங்குபற்றவில்லை. ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் மாநாட்டுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநாட்டில் இலங்கையை கடுமையாக விமர்சித்த மெக்ரே பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெறுவது தொடர்பாகவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
யுத்த குற்றங்களுக்கு தற்போதைய அரசே பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !