மட்டக்களப்பில் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் இன்று தோண்டியெடுக்கப்பட்டது.
2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்து, வயிற்று வலியினால் அவதியுற்ற 42 வயதான பெண் ஒருவர் மரணமடைந்தார். மட்டக்களப்பு கல்லடித் தெருவைச் சேர்ந்த ஜேசுதாசன் கோல்டன் பென்சமின் சாந்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர்.
பின்னர் இவரது சடலம் 19.09.2012 அன்று மட்டக்களப்பு கல்லியன் காடு கிறிஸ்தவ மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சாந்தியின் மரணம் தொடர்பில் அவருடைய கணவர் ஜேசுதாஸ் கோல்டன் பென்சமின் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய முறைப்பாட்டு கடிதத்தினையடுத்து, மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் மட்டக்களப்பு தலைமையகப் பொலிசார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்தனர்.
இதனை விசாரணை செய்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா, இப் பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதற்கமைய நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் சடலம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தோண்டப்பட்டது.
இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிகளான வைத்தியர் எம்.குணதிலக, மற்றும் வைத்தியர் எம்.ஏ.அப்துர் றஹ்மான், மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அனுரத்த ஹக்மன பண்டார, மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.சாந்தகுமார் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.
மேலும் குறித்த பெண்ணின் கணவர் ஜேசுதாஸ் கோல்டன் பென்சமின் மற்றும் அவரின் குடும்பத்தினரும் அங்கு இருந்தனர்.
சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பொலிசாரினால் அம்பாறை வைத்திய சாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
சாந்தியின் மரணம் தொடர்பில் இவரது கணவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் இரண்டு மகப்பேற்று வைத்தியர்களுக்கெதிராக முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !