Headlines News :
Home » » யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்ட 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில்!

யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்ட 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில்!

Written By TamilDiscovery on Tuesday, July 2, 2013 | 11:18 AM

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அந்த மக்கள் அனைத்தையும் இழந்த நிலையில் வாழ்ந்துவருகின்றனர். 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட விதவைப் பெண்கள் உள்ளனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெற்றோரற்ற பிள்ளைகள் பாதுகாவலர்களுடன் வாழ்கின்றனர். சில பிள்ளைகள் அடிமைகளை போன்றே வாழ்கின்றனர். இவர்கள் தொடர்பில் விரைவாக எதனையாவது செய்தாகவேண்டியுள்ளது என்று தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை சமூக ஒருமைப்பாட்டு வாரம் பிரகடணப்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது

கடந்தகால யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு மக்கள் பாரிய பாதிப்புக்களை சந்தித்தனர். அவர்கள் அனைத்தையும் இழந்துநிற்கின்றனர். அவர்களுக்கு சிறந்த ஜீவனோபாயத்தை வழங்கவேண்டியது எமது பொறுப்பாகும். குறிப்பாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைப் பெண்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ளனர். விதவைப் பெண்களை எமது சமூகம் வித்தியாசமான கோணத்திலேயே பார்க்கும்.

அத்துடன் விதவைகள் மறுமணம் புரிவதற்கு முயற்சித்தாலும் அதனையும் எமது சமூகம் விமர்சிக்கும். எனவே இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுக் காணப்படவேண்டியது அவசியமாகும். இந்த விதவைப் பெண்களுக்கு சிறந்த பொருளாதார நிலைமையை உருவாக்கும் நோக்கில் ஜீவனோபாயத் திட்டங்களை முன்னெடுக்கவேண்டும். இது தொடர்பில் அரச மொழிகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

இதேவேளை பெற்றோர்களை இழந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் உறவினர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் தங்கியுள்ளனர். இவர்களை உறவினர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கவனித்தாலும் இந்த பிள்ளைகளுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. சில பிள்ளைகள் அடிமைகளைப் போன்றே வாழ்ந்துவருகின்றனர். இவை மனதை உலுக்கும் நிலைமையாகும். இவற்றுக்கு ஏதோவொரு வகையில் தீர்வுகள் அவசியமாகும்.

எனவே அரச மொழிகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் 50 வீதமானவை வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலேயே முன்னெடுக்கப்படும் என்பதனை அறிவிக்கின்றேன். இது தேசிய கடமை என்பதனை நாம் உணரவேண்டும்.

இதேவேளை எமது அமைச்சினால் நாடாளவிய ரீதியில் சமூக ஒருமைப்பாட்டு வாரம் இம்மாதம் 15 ஆம் திகதியிருந்து 21 ஆம் திகதிவரை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்த வாரத்தில் நாட்டின் 25 மாவட்டங்களிலும் சமூக சமத்துவத்தையும் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. தேசிய சமூக ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் 24 அமைச்சுக்களின் பங்களிப்புடன் அமைச்சுக்கள் குழுவொன்மை அமைத்துள்ளோம். இந்தக் குழுவானது மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை கூடுகின்றது. இந்த சந்திப்புக்களின்போது சமூக ஒருமைப்பாட்டை வலியுறுத்தவும் அவற்றில் காணப்படும் தடைகளை அகற்றவும் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வோம்.

உதாரணமாக மலசல கூடங்கள் இல்லாத வீடுகள் எத்தனை நாட்டில் உள்ளன? வாழ முடியாத வீடுகள் எத்தனை நாட்டில் உள்ளன? ஆங்கிலம் தெரியாத எத்தனை பேர் உள்ளனர்? இவை தொடர்பில் ஆராயவேண்டியுள்ளது. இவை அனைத்தும் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தும் விடயங்களாகும். எனவே இந்த விடயத்தில் சமூக சமத்துவத்தை ஏற்படுத்த நாங்கள் முயற்சிக்கவேண்டும்.

குறிப்பாக பொலிஸார் பொது மக்களுடன் பேசும் முறை குறித்து சமூக ஒருமைப்பாட்டை கணிப்பிடலாம். குறிப்பாக சாதாரண பொது மக்களுடன் ஒரு விதத்திலும் உயர் பதவிகளில் உள்ள மக்களுடன் ஒரு விதத்திலும் பொலிஸார் பேசுவதுண்டு. இந்த நிலைமை வெளிநாடுகளில் இல்லை. வெளிநாடுகளில் உயர் பதவியில் உள்ளோர் முதல் சாதாரண தரத்தில் உள்ள மக்கள் வரை ஒரே சமமாகவே பொலிஸார் பேசுவார்கள்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template