இலங்கைக்கு விஜயம் செய்யும் போது வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றச் செயல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரஜைகளுக்கான இற்றைப்படுத்தப்பட்டுள்ள பிரயாணத் தகவலில் இலங்கையில் படுமோசமான குற்றச்செயல்கள் இடம்பெற்று வரும் அதேவேளையில் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டு வரும் வன்முறை சார்ந்த குற்றச்செயல்களும் பாலியல் வல்லுறவுகளும் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பொலிஸார் கண்காணித்துக்கொள்வதற்கு ஏதுவாக நாட்டிலுள்ள ஹோட்டல்களிலும் விருந்தினர் விடுதிகளிலும் தம்மைப்பதிவு செய்யும் போது ஹோட்டல் பணியாளர்களிடம் தமது கடவுச்சீட்டு பற்றிய தகவலை வழங்குமாறு அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் தற்போது கோரி வருகின்றது.
அத்துடன் பயணிகளை இலக்கு வைத்து குற்றச்செயல்கள் இடம்பெறலாம் என்பதாலும் பேருந்து சாரதிகள் வாகனம் செலுத்தும் அனைத்து விதிமுறைகளுக்கும் கீழ்ப்படியாததாலும் இலங்கையில் பேருந்துப் பயணத்தை மேற்கொள்ள வேண்டாமெனவும் அமெரிக்க பிரஜைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பயணிகள் விசேடமாக பெண்கள் இயலுமானவரை ஏனையோருடன் பயணிப்பதையே கருத்திற்கொள்ள வேண்டுமெனவும் மேற்படி பிரயாணம் பற்றிய தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பிரஜைகள் ஆபத்தை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிடத்தக்க ஆதாரம் எதுவும் இல்லாத போதிலும் இலங்கையில் இலக்கு வைக்கப்பட்டுள்ள ஆட்கடத்தல்களுக்கும் வன்முறைச் சம்பவங்களுக்கும் பொறுப்பாக நன்கு திட்டமிட்ட ஆயுதக் கும்பல்களே இருந்து வருவதாக தெரியவந்துள்ளதாகவும் அது மேலும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ளதிலும் பார்க்க இலங்கை நீதி முறைமை வேகம் குறைந்த தன்மை கொண்டதாக இருக்கலாமென தெரிவித்துள்ள அந்தக் குறிப்பில், மேலே குறிப்பிட்டுள்ள பிரித்தானிய பிரஜையின் படுகொலை உள்ளிட்ட ஏராளமான குற்றச் செயல்கள் குறித்த வழக்குகள் இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
காமுகர்கள் அடங்கிய குழுக்களால் தாங்கள் வாய்மொழி மூல மற்றும் உடல் சார்ந்த பாலியல் தொந்தரவுகளுக்கு உட்பட்டு வருவதாக மேற்கத்தேயப் பெண்கள் தொடர்ந்தும் முறையிட்டு வருகின்றனர். இத்தகைய பாலியல் தொந்தரவுகள் எங்கும் எந்நேரமும் நிகழலாம். ஆயினும் சந்தைப் பகுதிகள் புகையிரத நிலையங்கள் பேருந்துகள் பொது வீதிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் போன்ற சனக்கூட்டம் நிறைந்த பிரதேசங்களிலேயே இத்தகைய பாலியல் தொந்தரவுகள் இடம்பெற்றுள்ளன. பாலுணர்வைத் தூண்டும் துன்மார்க்க கருத்துக்களில் தொடங்கி பாலியல் வல்லுறவில் முடிவடையும் எல்லைகளை இந்த தொந்தரவுகள் அமைகின்றன.
உள்ளூர் வாசிகளே அதிகளவில் இத்தகைய பாலியல் வல்லுறவுகளுக்கு ஆளாகியுள்ள அதேசமயம் தென்னிலங்கை கடற்கரைகளில் உள்ள சுற்றுலாப் பிரதேசங்களில் பெண் சுற்றுலாப் பயணிகள் மீதான அதிகரித்த பாலியல் வல்லுறவுகள், வெளிநாட்டுப் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென்பதை கோடிட்டுக் காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !