
தூத்துக்குடியிலிருந்து 30 கடல் மைல் தொலைவில் நவீன ரக ஆயுதங்களுடன் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவை சேர்ந்த அட்வென் போர்ட் நிறுவனத்திற்கு சொந்தமான "சீமேன் கார்டு ஒகியா" என்ற கப்பலை கடந்த 11ம் திகதி இந்திய கடலோர காவல் படையினர் சுற்றிவளைத்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து க்யூ பிரிவு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இரண்டாவது நாளாக எஸ்.பி. பவானீஸ்வரி விசாரணையை தொடர்ந்தார்.
இந்நிலையில் கப்பலில் இருப்பவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையில் கப்பலில் உள்ளவர்களும் ´´அட்வென் போர்ட்´´ நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் அளிக்கும் தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் உண்மையை கண்டறிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் மர்மம் நீடிப்பதால் இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய உளவுப்பிரிவு அமைப்பான ‘ரா´ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதற்காக அந்த அமைப்பை சேர்ந்த ஒரு உயர் அதிகாரி தலைமையில் இரண்டு களஅதிகாரிகள் என மொத்தம் 3 பேர் தூத்துக்குடி வந்து இரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 6 மாதமாகவே சீமென்கார்டு ஒகியா கப்பல் இந்தியா, இலங்கை, மாலைதீவு ஆகிய 3 நாடுகளுக்கும் இடையே லாக்கேடிவ் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் கடந்த ஆகஸ்ட் 27ம் திகதி அங்கிருந்து கொச்சி துறைமுகத்திற்கு எளிதாக சென்று வந்துள்ளது. 29ம் திகதி அங்கிருந்து புறப்பட்டு இந்திய பெருங்கடல் வழியாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுற்றியுள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
அப்போதே இதன் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ள பாதுகாப்பு துறையினர் அந்த கப்பலில் சோதனையிடுமாறு கடலோர காவல்படைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த கப்பலில் நாயகிதேவி கமாண்டன்ட் நரேந்தர் தலைமையில் சோதனை நடந்துள்ளது. அப்போது கேப்டனுடன் சேர்ந்து 15க்கும் குறைவானவர்களே அதில் இருந்துள்ளனர்.
ஆயுதங்கள் எதுவும் இல்லை என்பதால் அந்த கப்பலை கடலோர காவல்படையினர் விடுவித்துள்ளனர்.
ஆனால் தற்போது இக்கப்பல் 35 நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் 35 பேருடன் சிக்கியுள்ளதால் அந்த கப்பலுக்கு ஆயுதங்கள் எவ்வாறு வந்தது? நடுக்கடலில் வேறு கப்பல்கள் மூலம் அமெரிக்க கப்பலுக்கு ஆயுதங்கள் பறிமாற்றம் நடந்ததா? உண்மையிலேயே இது அட்வென் போர்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலா அல்லது சர்வதேச அளவில் ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டுள்ள கப்பலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் கப்பலில் உள்ள ஆயுதங்களை பதிவு செய்ததற்காக அட்வென்போர்ட் நிறுவனம் அளித்துள்ள பதிவு சான்றுகள் உண்மையானவைதானா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
கப்பலில் உள்ள பிறநாட்டு ஊழியர்கள் நடவடிக்கை குறித்து அதிலிருந்த தமிழர் உட்பட 9 இந்தியர்களிடம் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கப்பலில் இருந்த தகவல் தொடர்பு சாதனங்களில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து கப்பல் நிறுவன பிரதிநிதி கொச்சியை சேர்ந்த சாக்கோ தாமஸ் தவிர வேறுயாரேனும் தொடர்பு கொண்டார்களா? டீசல் அளவு குறைவாக இருப்பதால் செப்டம்பர் மாதத்தில் சீமென் கார்டு கப்பலில் இருந்து அட்வென் போர்ட் தலைமையகத்திற்கு டீசல் தேவை என்று தெரிவித்த தகவல் உண்மையானது தானா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !