கொழும்பு - கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் இருந்து சுமார் 17 வருடங்களின் பின் அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த லொறியில் இருந்து 100 கிலோகிராம் நிறையுடைய ரி.என்.ரி ரக வெடிபொருட்கள் 8 பெட்டிகளில் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களால் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் வெடிபொருட்கள் சில 1996-02-12ம் நாளன்று லொறி ஒன்றில் இருந்து கொட்டாஞ்சேனை பொலிஸாரால் மீட்கப்பட்டது.
குறித்த லொறியில் இருந்து 75.5 கிலோ கிராம் ரி.என்.ரி வெடி பொருட்கள் அடங்கிய 6 பெட்டிகள் மீட்கப்பட்டன.
அதன்பின் பயங்காரவாத தடுப்புப் பிரிவினர் இது குறித்து விசாரணை செய்து வந்த நிலையில், லொறி கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
17 வருடங்களின் பின் நேற்று (12) குறித்த லொறியை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சித்த போது லொறிக்குள் சூட்சமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து நீதிமன்றிற்கு அறிவித்து வெடிபொருளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !