சிம்பாபே கிரிக்கெட் வீரர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, சிம்பாபேயில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஒவர், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஹராரேயில் வருகிற 23-ந் திகதி நடக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தொடர் தொடங்க இன்னும் ஒருவார காலமே இருக்கும் நிலையில் சிம்பாபே வீரர்கள் திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சிம்பாபே கிரிக்கெட் வாரியத்துடன் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வீரர்கள் புதிய சங்கத்தை தொடங்கி இருக்கிறார்கள். ஊதிய உயர்வு, அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கிண்ண போட்டியில் பங்கேற்பதற்காக சிம்பாப்பே கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. அளிக்கும் கட்டணதொகையில் 10 சதவீதத்தை வீரர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஊதிய உயர்வு அளிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள சிம்பாப்பே கிரிக்கெட் வீரர்கள், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தொடருக்கு தயாராகாமல் பயிற்சியை புறக்கணித்துள்ளனர். பிரச்சினைக்கு தீர்வு காண வீரர்கள் சங்க பிரதிநிதிகளுக்கும், சிம்பாப்பே கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த பிரச்சினை குறித்து சிம்பாபே கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குனர் வில்பிரட் முகோன்டிகா கூறுகையில், ‘வீரர்கள் சங்கம் அமைக்க கடந்த சில மாதங்களாக முயற்சித்தனர். ஆனால் இவ்வளவு விரைவில் வீரர்கள் சங்கம் அமைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. வீரர்களின் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சம்பள பிரச்சினைக்கு விரைவில் முடிவு காணப்படும். பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிதி பற்றாக்குறை காரணமாக சிம்பாபே கிரிக்கெட் வாரியம், வீரர்களுக்கு கடந்த மாத (ஜூலை) சம்பளத்தை வழங்கவில்லை.
இந்தியாவுக்கு எதிரான தொடரால் எங்களுக்கு பணம் கிடைத்தாலும், ஏற்கனவே உள்ள தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு பணம் கிடைக்கவில்லை. வீரர்களுக்கான சம்பள பாக்கி நிச்சயம் அளிக்கப்படும்’ என்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !