இந்நிலையில், தமிழகத்தில் இப்படத்தை வெளியிட்டால் திரையரங்குகளில் வெடிகுண்டு வைக்கப்படும் என மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து, இப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. ஆனால், மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலும் படம் வெளியானது. அங்கு படம் வெளியானதால், திருட்டு விசிடி கும்பல், இப்படத்தை திருட்டு விசிடி தயாரித்து புழக்கத்தில் விட ஆரம்பித்தது. இதனால் தயாரிப்பு வட்டாரம் பெரும் நெருக்கடியை சந்தித்தது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் இந்த படம் வெளியாகாவிட்டால் கடனாளி ஆகிவிடுவேன். ஆகையால், படத்தை வெளியிடவேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதற்காக படக்குழுவினருடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்தார். ஆனால், உண்ணாவிரதத்துக்கு காவல்துறை தடை விதித்தது.
இந்நிலையில், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள விஜயா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ‘தலைவா’ பட விவகாரத்தால் மனஅழுத்தம் ஏற்பட்டு, அதனால் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உண்ணாவிரதம்.
நடிகர் விஜய் நடித்துள்ள ‘தலைவா’, படத்தை தியேட்டர்களில் திரையிடுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், படத்தின் டைரக்டர் விஜய், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் வக்கீல் ராஜசேகருடன், நேற்று பகல் 11 மணி அளவில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தனர்.அவர்கள் கூடுதல் கமிஷனர் நல்லசிவத்தை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். மனு கொடுத்துவிட்டு வெளியில் வந்த அவர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில் எதுவும் பேசாமல் சென்றுவிட்டனர். பின்னர் அவர்கள் கூடுதல் கமிஷனரை சந்தித்து கொடுத்த மனு, இ-மெயில் மூலம் அனைத்து பத்திரிகை அலுவலகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
அவர்கள் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-
‘தலைவா’ திரைப்படம், கடந்த 9-ந் தேதி அன்று, உலகமெங்கும் வெளியாகி இருந்தது. ஆனால் திரையரங்குகளுக்கு வந்த மொட்டை கடிதங்களாலும், தொலைபேசி மிரட்டல்களாலும், தமிழகத்தில் திரையரங்கு உரிமையாளர்கள், ‘தலைவா’ படத்தினை வெளியிட மறுத்து வருகிறார்கள்.
இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மிகுந்த பொருள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் தலைவா படம் இணையதளம் வாயிலாகவும், வி.சி.டி வழியாகவும் தமிழகத்தில் புற்றீசல் போல பரவி வருகிறது. ‘தலைவா’ படத்தை, திரையரங்கு உரிமையாளர்கள் தொடர்ந்து திரையிட மறுத்து வருகிறார்கள்.
இதனால் ‘தலைவா’ படத்தை உடனடியாக திரையிட கோரிக்கை வைத்து, நடிகர் விஜய், நடிகர் சத்யராஜ், நடிகை அமலாபால், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், இயக்குனர் விஜய், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் மற்றும் அனைத்து நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், 16-ந் தேதி அல்லது 17-ந் தேதி (இன்று) அன்று அரசு அனுமதி கொடுக்கும் இடத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நடிகர் விஜய் நடத்தப்போவதாக அறிவித்துள்ள உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்படமாட்டாது என்று போலீஸ் தரப்பில் நேற்று மாலை தெரிவிக்கப்பட்டது.
உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி கோரி கொடுக்கப்பட்ட மனு, 5 நாட்களுக்கு முன்னதாக கொடுக்கப்படாததால், அந்த மனு நிராகரிக்கப்பட்டதாகவும், மனு கொடுத்தவர்களுக்கு இந்த தகவல் தபால் மூலம் தெரிவிக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் கூறினார்கள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !