சிரியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அந்நாட்டுக்கு உதவ ரஷ்யா போர் கப்பல்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. சிரியா ஜனாதிபதி பஷர்-அல்-ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும் படி, எதிர்க்கட்சியினர், இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், ஆசாத்தை பதவி விலகும் படி வலியுறுத்தின. ஆனால், ஆசாத் மறுத்து விட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு, இந்த நாடுகள் ஆயுத சப்ளை செய்து வருகின்றன. இதனால், சிரியாவில், தொடர்ந்து, சண்டை நடக்கிறது. இரண்டு ஆண்டுகளாக தொடரும் இந்த சண்டையில், 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 7 லட்சம் பேர், அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
சிரியா நாட்டுக்கு, ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகள், ஆதரவளித்து வருகின்றன. சிரியா ராணுவத்துக்கு, ரஷ்யா, நவீன ஆயுதங்களை வினியோகம் செய்து வருகிறது. இதனால், சிரியாவுக்கு எதிராக, ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒரு மனதாக தீர்மானம் கொண்டு வர இயலவில்லை.
கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சிரியா ராணுவம், கடந்த, 21ம் திகதி, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதில், 1,300 பேர் கொல்லப்பட்டனர். ரசாயன குண்டு வீச்சில், நச்சு புகை பரவி, 1,300 பேர் கொல்லப்பட்டதாக கூறும் இடத்தை, ஐ.நா., பார்வையாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை ரசாயன குண்டு பயன்படுத்தியதற்கான தடயம் கிடைக்கவில்லை.
ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் சிரியா மீது, நடவடிக்கை எடுக்கும்படி கோரும் தீர்மானத்தை, பிரிட்டன், ஐ.நா. பாதுகாப்பு சபையில், நேற்று முன்தினம், தாக்கல் செய்தது. இது தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூனுடன், தொலைபேசியில் விவாதித்தார்.
ஐ.நா. பார்வையாளர்களின் ஆய்வு முடிவுக்காக காத்திருக்கிறோம். எனினும், சிரியா மீது தாக்குதல் நடத்துவது குறித்து, இன்னும் முடிவு செய்யவில்லை. சர்வதேச விதிப்படி, ரசாயன ஆயுதங்களை, சிரியா பயன்படுத்தியது குற்றம். இதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் திரட்டி வருகிறோம். இதை, எதிர்க்கட்சியினர் பயன்படுத்தியிருப்பர் என்பதை, நாங்கள் நம்பவில்லை.
அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி மேரி ஹார்ப் கூறியதாவது: சிரியா அதிபர் பஷர்-அல்-ஆசாத்தின் உத்தரவில்லாமல், ரசாயன தாக்குதல் நடந்திருக்காது. அவருடைய உத்தரவில்லாமல், இந்த தாக்குதல் நடந்திருந்தாலும், ஜனாதிபதி என்ற முறையில் ஆசாத், இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
சிரியா மீது தாக்குதல் நடத்துவது குறித்து, ஐ.நா. பாதுகாப்பு சபையை நாடப்போவதில்லை. ஏனென்றால், சிரியாவுக்கு, ரஷ்யா பக்கபலமாக இருக்கிறது. இந்த விஷயத்தில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷ்யா தன் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, தாக்குதலை நடத்த விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபடும். இவ்வாறு மேரி கூறினார்.
சிரியா மீது போர் தொடுக்கப்பட்டால், வளைகுடா பகுதியில் பதற்ற நிலை ஏற்படும், எனவே, இந்த தாக்குதலை தடுக்க, ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுஹானி, ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் பட்சத்தில், பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்க உள்ளன. எனவே, சிரியாவின் நட்பு நாடு என்ற முறையில், ரஷ்யா, தன் பங்குக்கு, நீர்முழ்கி கப்பல் எதிர்ப்பு கப்பல்களையும், ஏவுகணை தாங்கிய கப்பல்களையும், அனுப்ப திட்டமிட்டுள்ளது. "சிரியா மீது, அமெரிக்கா தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதால், சிரியாவில் உள்ள தங்கள் நாட்டு மக்களை, ரஷ்யா வெளியேற்றி வருகிறது.
இதற்காக, இரண்டு சிறப்பு விமானங்களை அனுப்பி, தங்கள் மக்களை தாயகம் திரும்ப செய்கிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !