Headlines News :
Home » » கருணாநிதியை போல் நான் என்ன மானாட மயிலாட பார்த்துக் கொண்டிருக்கிறேனா? ஜெ. கேள்வி!

கருணாநிதியை போல் நான் என்ன மானாட மயிலாட பார்த்துக் கொண்டிருக்கிறேனா? ஜெ. கேள்வி!

Written By TamilDiscovery on Sunday, August 11, 2013 | 9:53 PM

தலைநகரிலேயே எப்பொழுதும் முதல்– அமைச்சர் இருக்கிறாரா, இல்லையா என்பது முக்கிய மல்ல. தலைநகரில் இருந்தாலும், தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் இருந்தாலும், மக்கள் நலனுக்கான துரித நடவடிக்கைகளை எடுக்கிறாரா என்பது தான் முக்கியம் என்று திமுக தலைவர் கருணாநிதியின் அறிக்கைக்கு பதிலளித்து இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:–

வேலியே பயிரை மேய்ந்தால் விளைவதெப்படி? என்ற பழமொழிக் கேற்ப, ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கையே சீர்குலைத்து அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை அமளிக்காடாக மாற்றிய கருணாநிதி, “ஒரு மாதத்திற்கு மேலாக முதல்–அமைச்சர் தலைநகர் சென்னையிலே இல்லையே” என்ற கேள்வியை தனக்குத் தானே கேட்டு கொண்டு, சில கொலை, கொள்ளைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நான் தலைநகரில் இல்லாமல் இருப்பது சரியல்ல என்ற ரீதியில் பதில் அளித்து, எந்தப் பத்திரிகையாவது இதைப்பற்றி ஒரு வார்த்தை எழுதியதுண்டா என்றும் அங்கலாய்த்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலத்தில் தமிழகத்தின் நன்மைக்காக பல முக்கியப் பிரச்சனைகளில் நான் எடுத்துள்ள நடவடிக்கைகளை தமிழக மக்களும், பத்திரிகையாளர்களும் நன்கு அறிவர். பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்பதைத்தான் மக்களும், ஊடகங்களும் கூர்ந்து நோக்குவார்களே தவிர, முதல்–அமைச்சர் அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தி முடிவெடுத்தாரா? அந்தக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடத்தப் பட்டதா? முதல்–அமைச்சரின் இல்லத்தில் நடத்தப்பட்டதா? முதல்–அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடத்தப்பட்டதா? முதல்–அமைச்சர் யார் யாருடன் விவாதம் நடத்தினார்? என்பதை யெல்லாம் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். அவ்வாறு கருத வேண்டிய அவசியமும் இல்லை.

எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அதன் மீது தீர்க்கமான, தன்னலமில்லாத, நியாயமான, பாரபட்சமற்ற முடிவை முதல்–அமைச்சர் எடுக்கிறாரா அல்லது தன்னலத்தையும், தனது குடும்ப நலத்தையும் கருதி முடிவுகளை எடுக்கிறாரா என்பது தான் முக்கியமே தவிர, அந்த முடிவு எந்த இடத்திலிருந்து எடுக்கப்படுகிறது என்பது முக்கிய மல்ல.

நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் ஒரு சில நாட்கள் தங்கியிருந்து, அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை நான் மேற்கொள்வேன் என்ற செய்தி தமிழக அரசின் செய்திக் குறிப்பு மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

கோடநாடு என்பது தமிழ்நாட்டின் ஒரு பகுதி. அந்தப் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும், பழங்குடியின மக்களும் வசித்து வருகிறார்கள். அந்தப் பகுதியில் சில காலம் தங்கியிருப்பது அப்படி என்ன மாபாதக செயலா? கோடநாடு என்ன லண்டனிலா இருக்கிறது? இல்லை கர்நாடக மாநிலத்தில் இருக்கிறதா? நான் சில நாட்கள் கோடநாட்டில் தங்கி இருந்தாலும், அன்றாட அரசுப் பணிகளை செவ்வனே மேற்கொண்டு வருகிறேன் என்பதை நியாய உணர்வுடைய அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். கோடநாட்டில் தங்கியிருந்த கடந்த சில நாட்களில் நான் செய்த அரசுப் பணிகள் அனைத்தையும் பட்டியிலிட விரும்பவில்லை. அதே சமயத்தில் ஒரு சில முக்கிய பிரச்சனைகள் குறித்து நான் எடுத்த நடவடிக்கைகளை இங்கே கோடிட்டுக் காட்டுவது எனது கடமையென கருதுகிறேன்.

தமிழகத்தில் நிலவும் சட்டம்ஒழுங்குப் பிரச்சனைகள் குறித்தும், தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்தும், தமிழகத்தின் உரிமைகள் குறித்தும் அவ்வப்போது கலந்தாலோசித்து நடவடிக்கை எடுத்து வரும் நான், தமிழக மக்களுக்கு எதிரான கருணாநிதியின் துரோகச் செயல்களையும் தோலுரித்துக் காட்டியுள்ளேன்.

விலைவாசி உயர்விற்கு வித்திடும் பெட்ரோல், டீசல் விலைகளை மாதத்திற்கு இரு முறை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே வருவதற்கு நான் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து, விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியதுடன், பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிர்ணயிக்க வேண்டிய முறை குறித்தும் எனது அறிக்கையில் சுட்டிக் காட்டி இருந்தேன்.

இதே போன்று, மத்திய அரசின் எரிவாயு விலை நிர்ணயக் கொள்கைக்கும் எனது எதிர்ப்பைத் தெரிவித்து நான் அறிக்கை வெளியிட்டேன். அந்த அறிக்கையில், 2014 ஏப்ரல் முதல் அமுலுக்கு வரும் எரிவாயு விலை நிர்ணயக் கொள்கையை நிர்ணயம் செய்யும் தார்மீக உரிமை அடுத்த ஆண்டு மே மாதம் வரை மட்டுமே ஆட்சியில் இருக்க தகுதியுடைய மத்திய அரசுக்கு இல்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளேன்.

இது தவிர, காப்பீட்டுத் துறை, தொலைத்தொடர்பு துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டின் அளவை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவினை எதிர்த்து நான் அறிக்கை வெளியிட்டேன். அந்த அறிக்கையில், இது போன்ற அந்நிய நேரடி முதலீட்டினை தொலைத் தொடர்புத் துறை, பாதுகாப்புத் துறை போன்றவற்றில் அதிகரிப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக அமையும் என் பதையும் சுட்டிக் காட்டி இருந்தேன்.

இது மட்டுமல்லாமல், என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது என்ற மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே எழுதிய கடிதங்களின் தொடர்ச்சியாக 7.7.2013 அன்று பாரதப் பிரதமருக்கு ஒரு கடிதத்தை எழுதினேன். அந்தக் கடிதத்தில், என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் தகுதியுள்ளவை என்பதை மீண்டும் சுட்டிக் காட்டி, தமிழக பொதுத் துறை நிறுவனங்களுக்கு என்.எல்.சி.யின் பங்குகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன்.

இது குறித்து விவாதிக்க தொடர்பு அலுவலரை நியமிக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இது குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த நான், என்.எல்.சி. பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் வாங்குவது தொடர்பான கருத்து ருவுக்கு நிதித்துறையின் முதன்மைச் செயலாளரை தொடர்பு அலுவலராக நியமித்தேன்.

இந்தத் தகவல் மத்திய அரசுக்கு தலைமைச் செயலாளரால் தெரிவிக்கப்பட்டது. என்னுடைய உத்தரவின் பேரில், 10.7.2013 அன்று நிதித் துறை முதன்மைச் செயலாளர், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் தொழில் துறையின் இணைச் செயலாளர் ஆகியோர் புது டெல்லிக்கு சென்று மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, மீண்டும் எனது உத்தரவின் பேரில், 15.7.2013 அன்று அந்த அதிகாரிகள் குழு மும்பை சென்று ‘செபி’ நிறுவன அதிகாரிகளுடன் விவாதித்தது. என்னுடைய அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளின் பேரில் தான் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்கினை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் வாங்க வழிவகை ஏற்பட்டது. இதனையடுத்து, தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் இந்த பங்கு விற்பனையில் பங்கேற்று, அதன் மூலம் இந்தப் பிரச்சனைக்கு ஒரு சுமுகமான தீர்வு காணப்பட்டது.

மேலும், ஈரான் நாட்டுச் சிறையில் 16 தமிழக மீனவர்கள் உள்ளனர் என்ற விவரம் எனக்கு கிடைக்கப் பெற்றவுடன், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி பாரதப் பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன். மேலும், சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுவதைக் கருத்தில் கொண்டு, முதல்– அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டேன். இந்த உதவித் தொகை அமைச்சர்கள் மூலம் அந்தந்த மீனவக் குடும்பங்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டுவிட்டது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு பாரதப் பிரதமருக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதி வருகிறேன்.

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து அதிகாரிகளுடன் நான் விரிவாக விவாதித் தேன். இந்த விரிவான விவாதத் திற்குப் பிறகு, 12.8.2013 முதல் தண்ணீர் திறந்துவிட முடிவெடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்பினை 27.7.2013 அன்று வெளியிட்டேன். அதன் பின்னர், கர்நாடக மாநிலத்தில் உள்ள காவேரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மிக அதிக அளவு மழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு 90,000 கன அடிக்கும் அதிகமாக நீர்வரத்து வந்தது. இவ்வாறு வரும் நீரினை அதிகபட்சம் பயன்படுத்திட வேண்டும் என்பதாலும், விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு தயார் நிலையில் இருந்ததாலும், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை முன்கூட்டியே, அதாவது 2.8.2013 முதல் திறந்துவிடுவது குறித்து 29.7.2013 அன்று ஓர் அறிக்கையினை நான் வெளியிட்டேன்.

இந்தத் துரித நடவடிக்கை, திடீரென அதிகளவு பெறப்பட்ட நீரினை இயன்ற அளவு பயன் படுத்திக் கொள்ள ஏதுவாக எடுக்கப்பட்டது. கோடநாட்டில் தங்கியிருந்த ஒவ்வொரு நாளும், நாள் தவறாமல் பல முறை தொலைபேசியில் தமிழக அரசின் தலைமைச் செயலாளருடனும், காவல்துறை தலைமை இயக்குநருடனும், பிற அரசு அதிகாரிகளுடனும் அவ்வப்போது பேசிக் கொண்டு இருந்தேன். அதனால் தான் பல பிரச்சினைகளில் உடனுக்குடன் விவாதித்து துரித முடிவுகள் எடுத்து செயல்படுத்த முடிந்தது.

இதைப் பற்றி எல்லாம் சரியாக புரிந்து கொள்ளாமல், மனம் போன போக்கில் இந்த அரசின் மீது குறை சொல்லி இருக்கிறார் கருணாநிதி.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதை பொறுத்தவரை, 21.7.2013 அன்று நான் ஓர் அறிக்கையினை வெளியிட்டேன். அந்த அறிக்கையில், இந்த வழக்கில் புலன் விசாரணையை துரிதமாக மேற்கொள்ள ஏதுவாக, ஒரு சிறப்பு புலனாய்வு குழு ஒன்று ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தேன். பின்னர், இது குறித்தும், சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோருடன் 25.7.2013 அன்று கோடநாட்டில் ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினேன்.

கலப்புத் திருமணம் செய்து கொண்ட தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளவரசன் மரணம் அடைந்தவுடன், இதன் காரணமாக சாதி மோதல்கள் ஏற்படா வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள நான் உத்தரவிட்டேன். இந்த மரணம் குறித்து தீரமாக விசாரிக்க ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து 8.7.2013 அன்று அறிக்கை வெளியிட்டேன்.

ஒகேனக்கல் வெள்ளப் பெருக்கில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் சிக்கி பரிதவிக்கின்றனர் என்ற தகவல் கிடைத்தவுடன், அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நான் உத்தர விட்டேன். இதனைத் தொடர்ந்து, அவர்கள் நால்வரும் இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கருணாநிதி தனது கேள்வி பதில் அறிக்கையில் ஒரு சில கொலைச் சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டின் சட்டம்ஒழுங்கு நிலைமை குறித்து விமர்சித்துள்ளார். கருணாநிதி முதல்–அமைச்சராக இருந்த போது சட்டம் ஒழுங்கு எவ்வாறு சீரழிந்த நிலையில் இருந்தது என்பது பற்றியும், தற்போது சட்டம் ஒழுங்கு நிலைமை எவ்வாறு சிறப்பாக உள்ளது என்பது பற்றியும் நான் சட்ட மன்றத்திலேயே பல முறை பேசியுள்ளேன். எனவே, இது குறித்து மீண்டும் விரிவாக தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

கருணாநிதி முதல்–அமைச்சராக இருந்து தமிழக முன்னேற்றத்திற்காக என்ன நடவடிக்கை எடுத்தார்? கருணாநிதி முதல்–அமைச்சராக இருந்த போது தனக்குத் தானே பாராட்டு விழாக்களை நடத்திக் கொள்வது, திரைப் படங்களை பார்த்து ரசிப்பது, புகழ் பாடுபவர்கள் மத்தியில் உலா வருவது, சினிமா கலைஞர்களை வைத்து தனக்குப் பாராட்டு விழா நடத்திக் கொள்வது, திரைப்படங்களுக்கு கதை எழுதுகிறேன் என்று சொல்லி பணம் சம்பாதிப்பது, தன் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவிகளைப் பெற்றுத் தருவது, மானாட, மயிலாட நிகழ்ச்சியை கண்டு களிப்பது போன்ற பணிகளுக்கே பெரும்பான்மை நேரத்தை ஒதுக்கினார். அரசு நிர்வாகமே முடங்கிக் கிடந்தது. இது நாடறிந்த உண்மை.

எனவே, தலைநகரிலேயே எப்பொழுதும் முதல்– அமைச்சர் இருக்கிறாரா, இல்லையா என்பது முக்கிய மல்ல. தலைநகரில் இருந்தாலும், தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் இருந்தாலும், மக்கள் நலனுக்கான துரித நடவடிக்கைகளை எடுக்கிறாரா என்பது தான் முக்கியம்.

தற்போது மின்னணு அஞ்சல், நிகரி, கைபேசி போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்ட நிலையில், காணொலிக் காட்சி மூலமாகவே உரையாடுகின்ற வசதி இருக்கின்ற சூழ்நிலையில், கற்கால மனிதரைப் போல் கருணாநிதி அறிக்கை விடுவது அறியாமையின் வெளிப்பாடு.

கருணாநிதி முதல்–அமைச்சராக இருந்த போது, தமிழ் நாட்டில் பல்வேறு அதிகார மையங்கள் செயல் பட்டதையும், அப்பாவி மக்களின் நிலங்கள் அபகரிக் கப்பட்டதையும், தன் குடும்ப வியாபாரத்திற்காக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு மூடு விழா நடத்தப்பட்டதையும், தமிழகத்தின் உரிமைகள் விட்டுக் கொடுக் கப்பட்டதையும், பதவி சுகத்திற்காக இலங்கைத் தமிழர்கள் அழிக்கப்படு வதற்கு உறுதுணையாக இருந்ததையும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

தன்னலமின்றி தமிழக மக்களுக்காக உழைப்பது தியாகம். தன்னலத்திற்காக தமிழக மக்களுக்கு உழைப்பது போல் நடிப்பது வியாபாரம். கருணாநிதி எந்த வகையைச் சார்ந்தவர் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வர் என இவ்வாறு அதில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template