விஜய் நடித்துள்ள தலைவா படம் வரும் 20ஆம் திகதி வெளியிடப்படும் என்று வேந்தர் மூவிஸ் தனது ட்விட்டர் இணையத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 'தலைமையேற்கும் நேரம் வந்துவிட்டது' என்ற விளம்பரம் அதிரடியாக நீக்கப்பட்டு படம் வெளியாகிறது.
'தலைவா' கடந்த 9ஆம் திகதி வெளியாவதாக இருந்த நிலையில், படம் ரிலீசாக இருந்த தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் 'தலைவா' படம் திட்டமிட்டபடி ரிலீசானது. இதனிடையே, ஆகஸ்ட் 15ஆம் திகதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அன்றும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. இதனால் தலைவா படம் எப்போது வெளியாகும்? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், படத்தை வெளியிடுவதில் நடிகர் விஜய், தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின், இயக்குனர் விஜய் ஆகியோர் தீவிர முயற்சிகள் எடுத்து வந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் படத்தின் திருட்டு சி.டிக்கள் வெளிவரத் தொடங்கியதோடு, இண்டர்நெட்டிலும் படம் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த விஜய் ரசிகர்கள், ´'தலைவா' படத்தின் திருட்டு சி.டி.க்கள் வைத்திருப்பவர்களை பிடிக்க களம் இறங்கினர். பல இடங்களில் திருட்டு சி.டி.க்களை விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து வீடியோவில் தோன்றி பேசிய விஜய், "தலைவா" படத்தில் பலருடைய உழைப்பு அடங்கியுள்ளது. திருட்டி சி.டி.யில் படத்தை பார்க்காதீர்கள். பொறுமையாக காத்திருங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதனிடையே, படத்தை வெளியிடக்கோரி, விஜய், படக்குழுவினருடன் உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்து சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு 5 நாட்களுக்கு முன்னர் அனுமதி பெற வேண்டும் என்ற விதியை காரணம் காட்டி காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனிடையே, இப்படத்தின் தயாரிப்பாளரான சந்திரபிரகாஷ் ஜெயின் நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், 'தலைவா' படத்தினை எங்களுக்கு கொடுத்தால் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியிடத் தயார்" என்று அன்பு பிக்சர்ஸ் நிறுவனரும், தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் நேற்று அதிரடியாக அறிவித்தார். இதனால், என்னவோ, 'தலைவா' படம் வரும் 20ஆம் திகதி வெளியாகும் என்று நேற்று இரவோடு இரவாக திடீரென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான தகவல் வேந்தர் மூவியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 20ஆம் தேதி படம் வெளியாவதாக விளம்பரங்களும் செய்யப்பட்டுள்ளன.
'தலைவா' பட விளம்பரங்களில் டைம் டூ ஹெட் (தலைமையேற்கும் நேரம் வந்துவிட்டது) என்கிற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. இந்த வாசகங்கள் தற்போது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.
பல்வேறு தடைகளை தாண்டி 'தலைவா' படம் வெளியாவது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 நாட்கள் போராட்டத்துக்கு பின் தலைவா படம் வெளியாவதால் அப்படம் திரையிடப்படும் தியேட்டர்களில் ரசிகர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். கட்-அவுட்டுகள், விஜய் மன்ற கொடிகள், தோரணங்கள் ஆகியவையும் கட்டப்பட்டு வருகிறது. இதனால் தலைவா படம் வெளியாகும் தியேட்டர்கள் களைகட்ட தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 500 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால் திட்டமிட்ட தேதியில் படம் வெளியாததால் தியேட்டர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
400 தியேட்டர்களில் 'தலைவா' படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல போராட்டத்துக்கு பின் 'தலைவா' படம் வெளியாக உள்ளதால் திரையிடப்படும் தியேட்டர்கள் களைகட்ட தொடங்கியுள்ளன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !