ஈரானிடம் யுரேனியத்தை சுத்தப்படுத்தும் 18,000 கருவிகள் உள்ளன என்று, அந்நாட்டு முன்னாள் அணுசக்தி தலைவர் பெரேடோன் அப்பாசி கூறியுள்ளார்.
ஈரான் அணுசக்தி தலைவராக இருந்தவர் பெரேடோன் அப்பாசி. இவருக்கு பதிலாக அப்பதவிக்கு அலி அக்பர் சலே என்பவரை, புதிய அதிபர் ஹசன் ரோஹானி நியமித்துள்ளார். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அலி அக்பர் சலேயிடம் பதவியை ஒப்படைத்தார் அப்பாசி. இந்நிலையில், அப்பாசி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, ஈரானிடம் அணு ஆயுதம் தயாரிக்கும் வல்லமை உள்ளது. யுரேனியத்தை சுத்தப்படுத்தும் வகையில் 18,000 சென்ட்ரிபியூஜ் கருவிகள் உள்ளன.
இவற்றில் 10,000 கருவிகள் தற்போது இயக்கத்தில் உள்ளவை. எனினும், இவை பழமையானது.
இதேபோன்ற 7,000 கருவிகள் புதிதாக தயாரிக்கப்பட்டு கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 1,000 சென்ட்ரிபியூஜ் கருவிகள் நவீன தொழில்நுட்பத்துடன் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்து ஈரானிடம் மொத்தம் 18,000 சென்ட்ரிபியூஜ் கருவிகள் உள்ளன. இவற்றை கொண்டு அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும். இவ்வாறு அப்பாசி கூறியுள்ளார். ஏற்கனவே ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் சந்தேகித்து வருகின்றன.
ஆனால், அமைதிப் பணிக்காகவே அணுசக்தியை பயன்படுத்தி வருகிறோம் என்று ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்கிடையே, ஈரானின் புதிய அதிபரான ரோஹானி, நாட்டின் அணுசக்தி கொள்கையை சீர்படுத்த வேண்டும் என்றும், மேற்கத்திய நாடுகளுடன் உள்ள பதற்றத்தை தணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !