ஆசிட் வீச்சில் பரிதாபமாக பலியான தமிழகத்தின் காரைக்கால் வினோதினி வழக்கில் இன்று, குற்றவாளி சுரேஷூக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது காரைக்கால் மாவட்ட அமர்வு நீதிமன்றம்.
சுரேஷூக்கு ஆயுள் மற்றும் ஒரு இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அபராத தொகையில் 50 ஆயிரத்தை வினோதினி குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. காரைக்கால் எம்.எம்.ஜி. நகர் என்ஜினீயர்ஸ் காலனியை சேர்ந்தவர் ஜெயபால், தனியார் பள்ளி காவலாளி. இவரது மகள் வினோதினி (வயது 23) என்ஜினீயரிங் பட்டதாரியான அவர் சென்னை சைதாப்பேட்டையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
காரைக்கால் திருவேட்டக் குடியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (27). கட்டிட கட்டுமான கருவிகளை வாடகை விடும் தொழில் செய்து வந்தார். இவர் ஜெயபாலின் குடும்ப நண்பராவார். அவருக்கு வினோதினி மீது காதல் ஏற்பட்டது. இதுபற்றி வினோதினியிடம் அவர் தெரிவித்தார். ஆனால் வினோதி சுரேஷ்குமாரின் காதலை ஏற்கவில்லை.
இந்த நிலையில் வினோதினி கடந்த தீபாவளி பண்டிகையின்போது சென்னையிலிருந்து ஊருக்கு வந்திருந்தார். நவம்பர் 14–ம் திகதி சென்னைக்கு செல்வதற்காக இரவு 10 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டார். அவருடன் தந்தை ஜெயபால், நண்பர் பத்மநாபன் ஆகியோரும் வந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த சுரேஷ்குமார் ஆசிட்டை எடுத்து வினோதினி மீது வீசினார்.
இதில் வினோதினியின் முகம் மற்றும் உடல் பகுதிகள் வெந்தன. தந்தை ஜெயபால், பத்மநாபன் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. 3 பேரும் உடனடியாக காரைக்கால் அரச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
வினோதியின் நிலைமை மிக மோசமாக இருந்ததையடுத்து சென்னை கீழ்பாக்கம் அரச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருடைய இரு கண்களும் பார்வை இழந்தன. உயிருக்கு போராடிய நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
3 மாதம் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கடந்த பெப்ரவரி மாதம் 12–ம் திகதி அவர் உயிரிழந்தார். வினோதினி மீது ஆசிட் வீசிய மறுநாளே சுரேஷ்குமாரை காரைக்கால் பொலிசார் கைது செய்தனர். அவர் மீது முதலில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வினோதினி இறந்ததையடுத்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. 6 வாரமாக சிறையில் இருந்து வந்த சுரேஷ்குமாரை சென்னை ஐகோர்டு மே மாதம் 23–ம் திகதி பிணையில் விடுதலை செய்தது. வினோதினி கொலை வழக்கை விரைவாக விசாரணை நடத்தி முடிக்க புதுவை அரசு முடிவு செய்தது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 10–ம் திகதி விசாரணை தொடங்கியது.
காரைக்கால் செசன்சு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நீதிபதி மார்கரட் ரோசலின் விசாரணை நடத்தினார். அரசு சார்பில் வக்கீல் வெற்றிச்செல்வனும், சுரேஷ் சார்பில் நாகப்பட்டினத்தை சேர்ந்த வக்கீல் வீரபாண்டியனும் ஆஜராகி வாதாடினார்கள். 560 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை நீதிபதி வைத்திய நாதனிடம் மாற்றப்பட்டது.
வினோதினி மீது ஆசிட் வீசியபோது நேரில் பார்த்தவர்கள், ஆசிட் விற்றவர், அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள் உள்பட 24 பேரிடம் விசாரணை நடந்தது.
கடந்த 12–ம் திகதி விசாரணை முடிந்தது. ஆகஸ்டு 20–ம் திகதி தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி வைத்தியநாதன் அறிவித்தார். அதன்படி இன்று தீர்ப்பு கூறப்பட்டது. சுரேஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !