இந்தியாவில் சர்சையை ஏற்படுத்தியுள்ள சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சரிதாநாயர் மற்றும் பிஜு ராதாகிருஷ்ணனுக்கு பல நடிகர், நடிகைகளுக்கு தொடர்புள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகள் அமைத்து தருவதாக கோடிக் கணக்கில் மோசடி செய்ததாக தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன், அவரது 2–வது மனைவி சரிதாநாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து கொச்சி நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது சரிதாநாயர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது அவர், நீதவானிடம் அளித்த இரகசிய வாக்கு மூலத்தில், தனது சோலார் பேனல் நிறுவனத்தை தொடர்ந்து நடந்த முடியாததால் தான் இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும், சோலார் பேனல் கருவி அமைத்து தருவதாக தான் பணம் பெற்றது உண்மை தான் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் நிர்வாக பிரச்சினை காரணமாக நிறுவனத்தை நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே சோலார் பேனல் கருவி பொருத்துவதாகக் கூறி பணம் பெற்றவர்களிடம் திட்டமிட்டப்படி அந்த கருவிகளை பொருத்தி கொடுக்க முடியவில்லை என்றும் சரிதாநாயர் தெரிவித்துள்ளார்.
இதுவரை சரிதாநாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் மீது 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, இவற்றில் 12 வழக்குகளில் விசாரணை நடந்துள்ளன. எனவே இந்த வழக்குகளில் விரைவில் பொலிசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர். இதன் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் பொலிசார் தீவிர விசாரணையில் இறங்குவார்கள். அப்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. மேலும் சரிதா நாயரிடம் பணம் கொடுத்து ஏமாந்த ஸ்ரீதரன்நாயர் 2012–ல் சரிதா நாயர் நிறுவனம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்த போது அங்கு சென்று இடத்தை பார்வையிட்டு உறுதி செய்த பிறகே பணத்தை கொடுத்துள்ளார்.
தனது நிறுவனம் பற்றிய பல்வேறு ஆவணங்களையும் அவருக்கு சரிதா நாயர் காட்டி உள்ளார். முதலமைச்சர் உம்மன் சாண்டியின் அலுவலகத்தில் தனக்கு நெருக்கமானவர்கள் உள்ளனர் என்று கூறி அவர்களுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் ஆதாரமாக காட்டி உள்ளார்.
இதை நம்பியே ஸ்ரீதரன் நாயர், சரிதா நாயரிடம் இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்துள்ள தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
சரிதா நாயருக்கு பிரபல மலையாள நடிகர், நடிகைகளுடனும் தொடர்பு இருந்து உள்ளது. அவரது நிறுவன தொடக்க விழாக்களையொட்டி அவர் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினார். இதில் நடிகர், நடிகைகள் பங்கேற்றுள்ளனர். மேலும் இவர்களுடன் சரிதாநாயர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் அவரது வீட்டில் இருந்தன. எனவே அந்த தொடர்பு பற்றியும் தற்போது பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேவேளை, சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் மம்முட்டிக்கு ரூ.10 இலட்சம் (இந்திய ரூபாய்) வழங்கியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளன.
சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் அவர்களது நிறுவனங்கள் சார்பில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக கொச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கலைநிகழ்ச்சி நடத்தினர். இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, விவசாய துறை அமைச்சர் மோகனன் உள்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது நடிகர் மம்முட்டிக்கு சிறப்பு விருதை வழங்கி சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரூ.10 இலட்சம் கொடுத்துள்ளனர்.
இதில் ரூ.25 ஆயிரம் காசோலையாகவும், மீதியை பணமாகவும் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் சோலார் பேனல் மோசடி மூலம் கிடைத்த பணத்தைதான் நடிகர் மம்முட்டிக்கு கொடுத்தாக சரிதா நாயரும், பிஜு ராதாகிருஷ்ணனும் பொலிசிடம் தெரிவித்துள்ளனர். இதேபோல் மோசடி மூலம் கிடைத்த பணத்தை ஏராளமான நடிகர், நடிகைகளுக்கு அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் மம்முட்டி கலந்து கொண்ட புகைப்படங்களும் பொலிசுக்கு கிடைத்துள்ளன. இதனால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !