மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 4ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. டக் வேர்த் லூயிஸ் முறையில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களால் இப்போட்டியில் வெற்றிபெற்றது.
சென் லூசியாவில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
மழை காரணமாகத் தாமதித்து ஆரம்பித்த இப்போட்டி, 49 ஓவர்கள் கொண்ட போட்டியாக ஆரம்பித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 49 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 261 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது விக்கெட்டை 20 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, 4 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களுடன் தடுமாறியது. எனினும் 5ஆவது விக்கெட்டுக்காக மார்லன் சாமுவேல்ஸ், லென்டில் சிமன்ஸ் இருவரும் 14.5 ஓவர்களில் 105 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் புரிந்து அணிக்கு வலு சேர்த்தனர்.
துடுப்பாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக மார்லன் சாமுவேல்ஸ் 104 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களையும், லென்டில் சிமன்ஸ் 44 பந்துகளில் 46 ஓட்டங்களையும், ஜோன்சன் சார்ள்ஸ் 48 பந்துகளில் 32 ஓட்டங்களையும், கிறிஸ் கெயில் 46 பந்துகளில் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக மொஹமட் இர்பான் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஜூனைட் கான், வகாப் றியாஸ், ஷகிட் அப்ரிடி, சயீட் அஜ்மல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 49 ஓவர்களில் 262 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 17 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 68 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டது.
போட்டி மீள ஆரம்பிக்கும் போது, பாகிஸ்தான் அணிக்கு 31 ஓவர்களில் 189 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வழங்கப்பட்ட இலக்கை பாகிஸ்தான் அணி 30 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து அடைந்தது. துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக மொஹமட் ஹபீஸ் 62 பந்துகளில் 59 ஓட்டங்களையும், மிஸ்பா உல் ஹக் 43 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும், உமர் அக்மல் 18 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக கேமர் றோச், ஜேஸன் ஹோல்டர், டுவைன் பிராவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக மேற்கிந்தியத் தீவுகளின் மார்லன் சாமுவேல்ஸ் தெரிவானார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !