இளவரசன்– திவ்யா காதலும் தற்கொலைகளும் நாட்டையே உலுக்கின. இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதால் எதிர்ப்பு கிளம்பியது. வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டனர்.
இதனால் திவ்யா தந்தை தற்கொலை செய்து கொண்டார். ஜாதி மோதல்கள் மூண்டு கிராமங்கள் சூறையாடப்பட்டன. பிறகு திவ்யா பிரிவு, இளவரசன் தற்கொலை என முடிந்துள்ளது. இந்த காதல் பின்னணியில் தமிழில் ஏற்கனவே நிறைய படங்கள் வந்துள்ளது. 2004–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய 'காதல்' படம் இளவரசன் காதலைப்போல் ஜாதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. மதுரையில் வசிக்கும் வெவ்வேறு ஜாதி இளைஞனும் பெண்ணும் காதல் வயப்பட்டு சென்னைக்கு ஓடி திருமணம் செய்து கொள்கின்றனர். பிறகு பெண்ணின் உறவினர்கள் பிரித்து அவளை இன்னொருவனுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். நாயகன் பைத்தியமாக அலைவதுபோல் படம் முடிக்கப்பட்டு இருந்தது.
1997–ல் வந்த 'பாரதி கண்ணம்மா' படமும் ஜாதீய ரீதியில் இருந்தது. மேல்சாதி பெண் தனது வீட்டில் வேலை பார்க்கும் தலித் இளைஞன் மேல் காதல் கொள்கிறாள். கிளைமாக்சில் அவள் தற்கொலை செய்கிறாள். அந்த இளைஞனும் சாகிறான். இப்படம் வெற்றிகரமாக ஓடியது.
கடந்த வருடம் ரிலீசான 'கும்கி' படமும் வெவ்வேறு ஜாதியின் காதலை மையப்படுத்தி வந்தது. கும்கி யானை வளர்க்கும் இளைஞன் மலை ஜாதி பெண்மேல் காதல் வயப்படுகிறான். வேறு ஜாதியினரை மணக்க கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கும் மலை ஜாதியினரால் அந்த காதல் கை கூடாமல் போவது போல் கதை முடிக்கப்பட்டு இருந்தது.
இளவரசன்– திவ்யா காதலை மையாக வைத்து மேலும் பல படங்கள் தயாராகி வருகின்றன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !