என்னைப் புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டும். அதுவரை நான் உணவருந்த மாட்டேன். அரசு எனக்கு தீர்வு பெற்றுத் தராவிட்டால் நான் எனது உயிரை மாய்த்துக் கொள்வேன் எனத் தெரிவித்து தமிழ் அரசியல் கைதி ஒருவர் 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என சிறைச்சாலை வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது.
கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உள்ள எஸ்.கேதீஸ்வரன் (வயது22) என்ற கைதியே இவ்வாறு உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். காடுகளில் உள்ள விடுதலைப் புலிகளுக்கு நீர் ஆகாரம் வழங்கினார் என்று குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 2009ம் ஆண்டு கேதீஸ்வரன் கைது செய்யப்பட்டார். அவர் மொனராகலை நீதிமன்றம் ஊடாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
வெல்லாவளி மட்டக்களப்பைச் சேர்ந்த இவர் தாய், தந்தை அற்றவர். கடந்த 6ம் திகதி மொனராகலை சிறைச்சாலையில் கேதீஸ்வரன் தன்னை விடுவிக்கக்கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். எனினும் அவர் துன்புறுத்தப்பட்டு எவருக்கும் தெரியாத வண்ணம் இந்தச் சம்பவம் மறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தொடர்ந்து உணவருந்த மறுத்தமையால் நிலைமை மோசமடைய கடந்த 13ம் திகதி கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிறைச்சாலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் தன்னை விடுதலை செய்யும் வரை உணவருந்த மாட்டேன் என்று கேதீஸ்வரன் விடாப்பிடியாக உள்ளார் என சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் மாதம் தங்காலை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த வேளை கேதீஸ்வரன் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !