கட்டாய திருமணத்திற்கு எதிரான சட்டம் இன்று முதல் சுவிட்சர்லாந்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டு ஆகக்குறைந்தது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சுவிட்சர்லாந்தின் சமஷ்டி அரசு அறிவித்துள்ளது.
கட்டாய திருமணத்தை செய்து வைப்பதில் சுவிட்சர்லாந்தில் உள்ள இலங்கை தமிழர்கள் பெரும்பாலும் ஈடுபடுவதாக சுவிசர்லாந்தின் பிரபல பத்திரிகையான சொண்டாக் பிளிக் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் சராசரி 400 கட்டாய திருமணங்கள் நடப்பதாகவும் இலங்கை, துருக்கி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், போன்ற நாடுகளை சேர்ந்த பெற்றோரே தமது பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக கட்டாய திருமணங்களை செய்து வைக்கின்றனர் என்றும் சுவிஸ் சமஷ்டி அரசின் ஆதரவுடன் நொசத்தல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சூரிச் மாநிலத்தில் உள்ள 22வயதுடைய சிந்துஜா என்ற தமிழ் பெண் தமது பெற்றோர் தனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக தெரிவித்துள்ளார். 16வயதில் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்ற போது தனது விருப்பத்திற்கு மாறாக தனது தந்தை தனக்கு தெரியாத ஒருவருக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் அத்திருமணத்தை செய்யவில்லை என்றால் உன்னை கொலை செய்வேன் என அச்சுறுத்தினார் என்றும் சொண்டாக் பிளிக் பத்திரிகைக்கு சிந்துஜா தெரிவித்துள்ளார்.
இப்பொழுது தனது பெற்றோரை பிரிந்து தனது நண்பருடன் வாழ்ந்து வரும் சிந்துஜா பெரும்பாலான தமிழ் பெண்கள் பெற்றோர்களால் அச்சுறுத்தப்படுவதாகவும் பெண்கள் தாங்கள் சுயமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இப்பொழுது தனது பெற்றோருடனான தொடர்புகளை முற்றாக துண்டித்து சுதந்திரமாக வாழ்வதாகவும் முன்னர் தனது தந்தை எல்லா விடயத்திற்கும் கட்டுப்பாடுகளை விதித்து அடக்கி வைத்ததாகவும் 22வயதுடைய சிந்துஜா தெரிவித்துள்ளார்.
இன்று நடைமுறைக்கு வரும் சட்டத்தின் மூலம் திருமண வயது 18க்கு மேல் இருக்க வேண்டும் என்றும் வெளிநாடுகளில் வயது குறைந்தவர்களுக்கு நடத்தப்படும் திருமணம் சுவிஸில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் சுவிட்சர்லாந்து சமஷ்டி அரசு அறிவித்துள்ளது. சில பெற்றோர் பிள்ளைகளை தங்கள் தாய் நாட்டிற்கு அழைத்து சென்று அங்கு வைத்து கட்டாய திருமணங்களை செய்து வைக்கின்றனர். இன்று நடைமுறைக்கு வந்துள்ள சட்டத்தின் மூலம் இனிமேல் சுவிஸில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கட்டாய திருமணங்கள் நீண்டகாலத்திற்கு நிம்மதியான வாழ்வை தராது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் றொலன் பிற்றர் கான்ஸ் தெரிவித்துள்ளார். கட்டாய திருமணங்களை செய்து வைக்கும் பெற்றோர்கள் தொடர்பாக பொதுமக்கள் எவரும் தமது அலுவலகத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த சட்டத்தை வரவேற்றுள்ள சுவிட்சர்லாந்தின் கட்டாய திருமணத்திற்கு எதிரான அமைப்பின் தலைவியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான அனுசூயா சிவகணேசன் இச்சட்டம் கட்டாய திருமணத்திலிருந்து பெண்களை பாதுகாக்கும் என தெரிவித்துள்ளார். இத்தகைய குற்றங்களில் பெரும் பாலும் இலங்கை தமிழர்கள் ஈடுபடுகிறார்கள் என சுவிட்சர்லாந்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. உங்கள் நிறுவனத்திற்கு அவ்வாறான முறைப்பாடுகள் கிடைத்திருக்கிறதா என அனுசூயா சிவகணேசனிடம் கேட்ட போது கட்டாய திருமணம் செய்து வைக்கும் குற்ற செயல்களில் தனியே இலங்கை தமிழர்களை மட்டும் குற்றம் சாட்டமுடியாது. ஏனைய ஆசிய நாடுகள் மற்றும் இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்களும் ஈடுபடுகிறார்கள் என தெரிவித்தார்.
கோடைகால விடுமுறையில் தங்கள் தாய் நாட்டிற்கு பிள்ளைகளை அழைத்து செல்வோர் இத்தகைய குற்றங்களை புரிகின்றனர் என்றும் இது ஒரு கிரிமினல் குற்றமாக கருதப்படும் என்றும் அனுசூயா தெரிவித்தார். பிள்ளைகளின் விருப்பத்துடன் பெற்றோர் பேசி முடித்து வைக்கும் திருமணங்கள் கட்டாய திருமணம் என்ற குற்றத்திற்குள் அடங்காது என்றும் அனுசூயா தெரிவித்தார். பிள்ளைகளின் பூரண சம்மதத்தை பெற்று பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து வைப்பதில் எந்த தவறும் கிடையாது எனம் தெரிவித்தார்.
Home »
World
» கட்டாய திருமணத்திற்கு எதிரான சட்டம் இன்று முதல் சுவிட்சர்லாந்தில்: இலங்கைத் தமிழரின் கட்டாயத் திருமணத்தால்!
கட்டாய திருமணத்திற்கு எதிரான சட்டம் இன்று முதல் சுவிட்சர்லாந்தில்: இலங்கைத் தமிழரின் கட்டாயத் திருமணத்தால்!
Written By TamilDiscovery on Tuesday, July 2, 2013 | 1:05 PM
Labels:
World
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !