தர்மபுரியில் காதல் பிரச்சனையால் உயிரிழந்த இளவரசனிடம் கடைசியாக தொலைபேசியில் வெகுநேரம் பேசிய நபர் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.
இளவரசன் கடந்த 4ம் திகதி ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என பொலிசார் தெரிவித்தனர்.
ஆனால் அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இளவரசன் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். இது குறித்து அவர்கள் கூறுகையில், இளவரசன் ஆந்திர மாநிலம் சித்தூருக்கு செல்வதாக கூறி காலையில் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ. 9 ஆயிரம் பணம் எடுத்தார். அதில் ரூ. 7 ஆயிரத்தை தனது தாயிடம் கொடுத்து விட்டு மீதி பணத்தை ஊருக்கு செல்ல வைத்துக் கொண்டார். மேலும் தன்னுடன் சித்தூர் வரை வரும்படி இளவரசன் தனது உறவினர் ஒருவரை அழைத்துள்ளார். அவர் வர மறுத்த நிலையில் இளவரசன் மட்டும் சென்றதாகவும் தெரியவந்தது.
எனவே தற்கொலை செய்து கொள்ள நினைத்து இருந்தால் அவர் உறவினரை தன்னுடன் எப்படி அழைத்து இருப்பார்? எனவே இளவரசன் கண்டிப்பாக கொலை செய்யப்பட்டுள்ளார் என குற்றம் சாட்டினர்.
இளவரசனின் மரணம் கொலையா? தற்கொலையா? என்று இன்றுவரை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இளவரசன் கடந்த 4ம் திகதி 2.30 மணியளவில் இறந்ததாக கூறப்படுகின்றது. எனவே அன்றைய தினம் அவருடன் யாரெல்லாம் எவ்வளவு நேரம் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்கள் என்று பொலிசார் விசாரணை நடத்தியதில் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த கார்த்தி (30) டிரைவர் வேலை பார்க்கும் இவர் பலமுறை இளவரசனிடம் தொலைபேசியில் பேசியிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஆந்திராவில் இருந்து தனிப்படை பொலிசார் கார்த்தியை தர்மபுரி கொண்டு வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இளவரசன் மரணத்தில் பல சர்ச்சைகள், சந்தேகங்கள் இருக்கும் சூழ்நிலையில் தற்போது ஆந்திர வாலிபர் சிக்கியுள்ளதால் இந்த பிரச்சனை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !