அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி பல ஆண்டுகளாக தமிழில் கேட்கப்படுகிறது. அதற்கு இணையாக, என்றும் எப்போதும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று ஒருசாரர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கான போட்டி ஒருபோதும் முடிவுக்கு வரப்போவதில்லை.
சிம்பு குழந்தை நட்சத்திரமாக இருக்கையில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அடைமொழி தந்து அவரது தந்தை டி.ராஜேந்தர் சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு முதல் போட்டியை தொடங்கினார். அதன் பிறகு பல பேர். கார் ரேஸிலிருந்து திரும்பி சினிமாவில் முழுக்கவனம் செலுத்திய காலகட்டத்தில், சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேண்டும் என்று அஜீத் சொன்னது பலத்த சர்ச்சையை கிளப்பியது. தனது கடின உழைப்பையும், ஈடுபாட்டையும் வெளிப்படுத்த அவர் சொன்ன வார்த்தை பலரை கோபப்படுத்தியது. சிலர் கிண்டலடித்தனர். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் குறித்து அஜீத் இதுவரை வாயே திறந்ததில்லை.
விஜய் தன்னை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னதில்லை. அவர் சம்பந்தப்பட்ட மேடையில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்ற கோஷம் இடம்பெறாமல் இருந்ததுமில்லை. விஜய் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பும், விலையும், குழந்தைகளிடம் அவருக்கிருக்கும் வரவேற்பையும் வைத்து அடுத்த சூப்பர் ஸ்டாருக்கான தகுதி அவரிடமிருப்பதாக பலரும் கருதுகின்றனர். தயாரிப்பாளர் தாணு அதில் முக்கியமானவர். ரஜினிக்கு அடுத்து விஜய்தான் என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குறிப்பிடுவார். விஜய் விருது வழங்கும் விழாவில் துப்பாக்கிக்காக விருது வாங்கும் போது இதனை சற்று அழுத்தியே சொன்னார். ஆளவந்தானில் தன்னை நஷ்டப்படுத்திய எதிரி கமல்ஹாசன் அமர்ந்திருக்கும் நிகழ்ச்சியில் இப்படிப் பேச கிடைத்த சந்தர்ப்பத்தை தாணு நிச்சயம் தவறவிட மாட்டார்.
ரஜினியைப் போலவே அடக்கம், ஓபனிங் கிங், ஆன்மீகத்தில் ஈடுபாடு, தனது படங்களையே ப்ரமோட் செய்யாதவர்... என அஜீத்தை அடுத்த சூப்பர் ஸ்டார் என சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். அவரா இவரா என்ற போட்டியில் இப்போது புதிதாக சூர்யாவையும் கோர்த்துவிட்டிருக்கிறார்கள்.
சிங்கம் 2 வெற்றிவிழா நிகழ்ச்சியில் பலரும் அடுத்த சூப்பர் ஸ்டார் சூர்யாதான் என்று சொல்லி சூர்யாவுக்கே அதிர்ச்சி தந்தனர். நன்றாக காமெடி செய்கிறார், ரஜினி மாதிரியே பேசுகிறார், கறுப்பாக இருக்கிறார் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்று சிவ கார்த்திகேயனை முன்னிறுத்துகிற முயற்சிகளும் நடக்கிறது. ஆக, சூப்பர் ஸ்டார் நாற்காலி ஏலத்துக்கு வந்திருக்கிறது.
நடிகர் திலகம், மக்கள் திலகம், கலைஞானி என்று வகைதொகையில்லாமல் பட்டங்கள் இருந்தும் சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் ஏன் இந்த அடிதடி. ரஜினி வைத்திருப்பதாலா?
ஓரளவு அது உண்மை. சூப்பர் ஸ்டார் என்பது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு அடைமொழி. இசைத்துறையில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார், கால்பந்தில் சூப்பர் ஸ்டார் என சினிமா தாண்டியும் சூப்பர் ஸ்டார் என்பது பயன்படுத்தப்படுகிறது. மக்கள் திலகம், கலைஞானி போல அது யுனிக்கானது அல்ல. ஒவ்வொரு மொழியிலும் சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள்.
மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கில் சிரஞ்சீவி, இந்தியில் அமிதாப் தொடங்கி ஷாரூக்வரை பல பேர். தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் என்றால் அது தியாகராஜ பாகவதர். வடஇந்திய ஊடகங்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார், தமிழ் சூப்பர் ஸ்டார் என்றே குறிப்பிடுகின்றன.
super star ngrathu perukaga illa.................rajinikanth padam ellam vetri vetri(from beginning to end).......ithanala avar super star.......so you are wrong.......
ReplyDelete