பிரேசில் நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அதற்குப் பின்னர், தற்போது ஜூன் இரண்டாம் திகதி முதல் அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இதனை எதிர்த்து தலைநகர் ரியோ டி ஜெனிரோவிலும் மற்றொரு பெரிய நகரமான சா பாவ்லோவிலும் தொடங்கிய மக்களின் போராட்டம் அரசின் வரிப்பணம் விரயமாக்கப்படுவதிலும், மக்களின் சேவைக் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டும் பெரும் போராட்டமாக உருவெடுத்துள்ளது. சுமார் 1.5 மில்லியன் மக்கள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர். அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம் போன்றவற்றிக்கு செலவழிக்க முடியாத அரசு கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தைச் செலவு செய்து கால்பந்துப் போட்டிகளை நடத்துவது மக்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. ஜனாதிபதி தில்மா ரூசோவின் சமாதான முயற்சிகளும் எடுபடவில்லை. இந்தநிலையில், நேற்று கால்பந்து இறுதிப் போட்டியில் பிரேசிலும், ஸ்பெயினும் மோதின.
இதன்போது, 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் மைதானத்தின் முன்பு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியபடி ஊர்வலமாகச் சென்றனர்.
அவர்களின் பாரம்பரிய இசைக்கேற்றபடி சம்பா நடனத்தை ஆடிக்கொண்டு வந்த அவர்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். இதனால் கால்பந்து போட்டி நடைபெறும் மரக்கானா மைதானம் பெரும் பரபரப்புக்கு உள்ளானது. இதையடுத்து 11000-க்கும் மேற்பட்ட பொலிஸாரும், இராணுவ வீரர்களும் மைதானத்தின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயினை எதிர்த்து விளையாடிய பிரேசில் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !