விக்கி லீக்ஸ் இணையத்தளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அஸேஞ் அவுஸ்திரேலியாவில் இந்த வருடம் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் முகமாக அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார்.
தனது விக்கி லீக்ஸ் கட்சியானது தேர்தலில் போட்டியிடுவதற்கு அவுஸ்திரேலியாவின் விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் மேற்கு அவுஸ்திரேலிய மாநிலங்களில் 7 வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக ஜூலியன் அஸேஞ் (41 வயது) தெரிவித்தார்.
லண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ள ஜூலியன் அஸேஞ், அங்கிருந்து இணையத்தள வீடியோ இணைப்பின் மூலம் அவுஸ்திரேலிய மெல்போர்ன் நகரில் இடம்பெற்ற தனது கட்சிக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
பாலியல் குற்றச்சாட்டு விசாரணைகள் தொடர்பில் பிரித்தானியாவிலிருந்து சுவீடனுக்கு நாடு கடத்தப்படவிருந்த நிலையில் ஈக்குவடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். அவுஸ்திரேலிய பிரஜையான ஜூலியன் அஸேஞ், எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் நடைபெறவுள்ள தேர்தலில் விக்டோரியா மாநிலத்தில் பாராளுமன்ற மேல்சபையான செனட் சபைக்கு விக்கிலீக்ஸ் கட்சியின் சார்பில் ஏனைய இரு வேட்பாளர்களுடன் இணைந்து போட்டியிடவுள்ளார்.
விக்கிலீக்ஸ் கட்சியானது இந்த மாதம் அவுஸ்திரேலிய தேர்தல் ஆணையகத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ஜூலியன் அஸேஞ் வெற்றி பெறுவாராயின், அவர் எதிர்வரும் 2014ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதிக்குள் தனது செனட்சபை பதவியை ஏற்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலியன் அஸேஞ் தேர்தலில் வெற்றி பெற்று அவுஸ்திரேலியாவுக்கு திரும்ப முடியாது போகும் பட்சத்தில், தமது கட்சி அவரது பதவிக்கு வேறொருவரை தெரிவு செய்யும் என விக்கிலீக்ஸ் கட்சியின் உறுப்பினர் சாம் காஸ்ட்ரோ தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !