உலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட 13 ஆசிய நாடுகளின் காடுகளில் புலிகள் உயிர்வாழ்கின்றன. கடந்த 1900ம் ஆண்டில், உலகில் லட்சம் புலிகள் இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
19ம் நூற்றாண்டில், இந்தியாவில் 37 ஆயிரம் புலிகள் இருந்ததாகவும், 1969ல், புலிகள் எண்ணிக்கை 2,500 ஆக குறைந்துவிட்டதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, புலிகள் கணக்கெடுப்பு நடக்கிறது. இதன்படி 2011ம் ஆண்டில், 1706 புலிகள் உள்ளதாக தெரியவந்தது. கடந்த 2006ல் இருந்த எண்ணிக்கையைவிட 296 புலிகள் அதிகமாகியுள்ளன.
வங்கப்புலி, மலேயப்புலி, சுமத்ரா (இந்தோனேசியா) புலி, சைபீரியன் புலி, தென் சீனப்புலி என, பல வகை புலிகள் உள்ளன. புலியின் மீதுள்ள கோடுகள் ஒவ்வொன்றுக்கும் வித்தியாசப்படும். அதன் எலும்பு, பற்கள், நகம், தோல் என அனைத்து உறுப்புகளும் மருத்துவ குணம் கொண்டவையாக கருதப்படுகிறது.
சீனாவில், இவற்றைக் கொண்டு நாட்டு மருந்தும் தயாரிக்கின்றனர். இந்திய மத்திய அரசு 1970ல், புலி வேட்டைக்கு தடை விதித்து சட்டம் இயற்றியது. இந்தியாவில், புலிகளுக்கான முதல் சரணாலயம், உத்தரப்பிரதேசம் நைனிடால் மாவட்டத்தில், 1973ம் ஆண்டு, ஏப்.,1ல் துவக்கப்பட்டது. இந்த ஆண்டு, மார்ச் 15ல், சத்தியமங்கலம் வனப்பகுதி, புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில், மொத்தம் 43 சரணாலயங்கள் உள்ளன.
உலகளவில் கடந்த நூறு ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையில் 97 சதவீதம் அழிந்து விட்டன. அதாவது ஒரு லட்சம் புலிகளில், தற்போது வெறும் 3,200 புலிகள் மட்டுமே வாழ்கின்றன. உலகில் புலிகளின் இயற்கை வாழ்விடங்களில், 93 சதவீதம் அழிக்கப்பட்டு, அது விவசாய நிலங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாறி விட்டது.
புலிகள் மற்றும் யானைகளுக்கு சர்வதேச சந்தையில் நல்ல மதிப்பினால், பல ஆண்டுகளாக மனிதர்கள் புலிகளை சட்ட விரோதமாக வேட்டையாடி வந்தனர். இதன் காரணமாக புலிகள் எண்ணிக்கை குறைந்தது. மேலும் காடுகளில் ஏற்படும் தீ விபத்து, காட்டாற்று வெள்ளம் காரணமாகவும் புலிகள் அழிகின்றன.
உலகிலேயே இந்திய வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக்காடுளில் தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன. இவ்வகை புலிகள் பெங்காலி புலிகள் என அழைக்கப்படுகின்றன.
இருப்பினும் இப்பகுதியில் வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் உயரும் ஆபத்து உள்ளதால், இங்கு வாழும் புலிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !