நெஹ்ரூ தீவு புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் இலங்கையர்கள் கலகம் விளைவித்ததாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்தவர்கள் நெஹ்ரூ தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கி கலகம் விளைவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கலகத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் இலங்கைத் தமிழர்கள் எனவும், காவல்துறையினரைத் தாக்கி முகாமை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. கலகம் வெடித்த காரணத்தினால் 60 புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறெனினும், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மோதல் சம்பவத்தில் குறைந்தபட்சம் பதினைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர். புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் மிகவும் மந்த கதியில் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்து முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் கலகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !